திங்கள், மே 21, 2018

அம்மாடியோவ்! இத்தனை பசங்களா!? ஐஞ்சுவை அவியல்

மாமா! எனக்கு ஏழரை சனி ஆரம்பிச்சிருக்காம். அதனால, கெட்டது நடக்காம இருக்கு காக்காவுக்கு சோறு வச்சிட்டு,, சாமி கும்பிட்டு அப்புறமா என்னை சாப்பிட சொல்லி இருக்காங்க. 

ம்ம்ம் மத்த பறவையை விட்டுட்டு காக்காவுக்கு ஏன் சோறு வைக்குறாங்கன்னு சொல்லு பார்க்கலாம்... 

சனி பகவானோட வாகனம்ங்குறதால சோறு வைக்குறாங்க. அதுமில்லாம நம்ம மூதாதையர்கள்லாம் காக்கா ரூபத்துல வருவாங்கன்னு சொல்றதாலயும் சோறு வைக்க சொல்றாங்க. அதுமட்டுமில்லாம, காக்காவுக்கு விருந்தாளிங்க வர்றது தெரியும். அதானலயும் சோறு வைக்க சொல்றாங்க. 

ம்க்கும், வாட்ஸ் ஆப், ஐ.எம்.ஓ, வீடியோ கால்ன்னு உலகம் போகுது. காக்கா வந்து உனக்கு தகவல் சொல்லுதா?!  ஆன்மீக காரணத்தை தாண்டி அறிவியல் காரணம் ஒன்னு இருக்கு. அது என்னன்னா, காக்காவுக்கு பய உணர்ச்சி இல்ல. பழக்காமயே மனிதர்களோடு சட்டுன்னு நெருங்கிடும். அதனால, வீடு, வாசல், தோட்டம்ன்னு மனிதர்கள் புழங்குற இடத்துல காக்காவும் புழங்கும். காக்கா செத்த பூச்சி, பல்லி, கரப்பான், எலி, பாம்பு, தவளைன்னு பாச்சைலாம் சாப்பிடும் குணம் கொண்டது.  சோறு சாப்பிட வரும் காக்கா வீட்டுல செத்து விழுந்திருக்கும் பல்லி கரப்பான், பாச்சைகளை சாப்பிட்டு சுத்து சூழலை சுத்தமா வச்சிக்க உதவுறதாலயும் காக்காவை வீட்டுக்கு வர வைக்குற உத்திக்காகத்தான் அப்பிடி சொல்லுறாங்க.

ஓஓஒ இதுல இப்பிடி ஒரு காரணமிருக்கா?! அப்ப போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை.. வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலைன்னு சொல்றாங்களே அதுக்கு என்ன அர்த்தம்ன்னு உனக்கு தெரியுமா?!

ம்ம்ம்  போக்கு + கற்றவன் அதாவது எவனெவன் எந்த மாதிரி நடந்துப்பான், என்ன மாதிரி நடந்திருக்கும்ன்னு யூகிக்க தெரிஞ்சவன்  போலீஸ் வேலைக்கு தகுதியானவன்.  வாக்கு +கற்றவன்.. வாக்குன்னா எல்லாத்தை பத்தியும் தெரிஞ்சுக்கிட்டிருந்தாலும் எல்லாருக்கும் புரியுற மாதிரி சொல்ல முடியாது அந்த  மாதிரி புரிய வைக்கும் திறமையை கொண்டவனுக்கு வாத்தியார் வேலை சரிப்பட்டு வரும்ன்னு சொல்லுறதுதான் இந்த பழமொழி..

ஒரு ஆணோ, இல்ல பெண்ணோ தன் வாழ்நாள்ல எத்தனை குழந்தை பெத்துக்க முடியும்ன்னு சொல்லு பார்க்கலாம்.  

புராணக்கதைகளில் நூத்துகணக்கா சொல்வாங்க. புராணக்கதையில் பல பொண்டாட்டி இருந்ததால சாத்தியம்.  நம்ம தாத்தா பாட்டி காலத்துல இருதார மணம்ங்குறது சகஜம். கூடவே குழந்தை இறப்புங்குறது சகஜம். அதனால பதினாறு, பதினேழுன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்பலாம் ஒன்னுத்துக்கே வழிய காணோம்.  ஏன் கேக்குறீங்க மாமா?!

18ஆம் நூற்றாண்டில் மொரோக்கோவை ஆண்ட மன்னர் மொர்லே இஸ்மாயிலுக்கு 500 அந்தப்புரப் பெண்கள். அவர்கள் மூலம் அவர் பெற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 888. 1816 முதல் 1872 வரை ரஷ்யாவில் வாழ்ந்த வாசிலெட் என்ற பெண்மணிதான் அதிக குழந்தைகள் பெற்றவர். 27 முறை கர்ப்பம் தரித்திருக்கிறார். பதினாறு பிரசவத்தில் இரட்டைக்குழந்தைகள், ஏழு பிரசவத்தில் மும்மூன்று குழந்தைகள்,  நான்கு குழந்தைகள் வீதம் நான்கு பிரசவம். மொத்தம் 69 குழந்தைகளாம்.  இதுதான் இப்ப வரைக்கும் லீடிங்க்ல இருக்கு..

ஆத்தாடியோவ், இதுங்களைலாம் எப்படி படிக்க வச்சு, கல்யாணம் கட்டிக்கொடுத்து கரையேத்துறதாம்?!

ரொம்ப வாய பொளக்காத... வாட்ஸ் அப்ல வந்த ஒரு ஜோக்கை காட்டுறேன். பார்த்து சிரிச்சு ரிலாக்சாகி, காஃபி குடிச்ச டம்ப்ளரை கழுவு.

ம்ம்ம் காஃபி போட்டு கொடுக்க முடிஞ்ச உங்களால ரெண்டு டம்ப்ளரை கழுவ முடியாதாக்கும். அதுமில்லாம, என்னையவிட நீங்கதான் சுத்தமா பாத்திரம்லாம் கழுவுவீங்க.

பார்த்தியா?! இடத்தை கொடுத்தா மடத்தை புடுங்குறியே! இதுக்குதான்டி உன்ன்னாக்கூடலாம் சேரக்கூடாதுன்னு என் அம்மா சொல்லி இருக்காங்க...

சரி, சரி, விடுகதை போட்டு ரொம்ப நாளாச்சுது. அண்ணன் தயவில் தம்பி ஆட்சி அமைப்பான். யார் அந்த தம்பி?!

யோசிச்சு வைங்க. வேலைலாம் முடிச்சுட்டு வாரேன்..

நன்றியுடன், 
ராஜி 

ஞாயிறு, மே 20, 2018

கண்ணில் வந்ததும் நீதான்.. பாட்டு கேக்குறோமாம்

அழகான தமிழில் டூயட் பாடல்...

இன்னொரு டூயட்..

அழகானதொரு கூட்டு குடும்பத்தை காட்சிப்படுத்தும் பாடல்..

சன் டிவி ஆதிக்கத்துக்கு பின் தியேட்டருக்கு போய் படம் பார்க்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டுது. அதும் 2000களில் படம் பார்ப்பதே குறைஞ்சு போச்சுது. படத்தோட சில காட்சிகளை டிவியில் போக வர பார்ப்பதோடு சரி.  பாடலுக்காக இந்த படத்தை பார்க்கனும்ன்னு தோனிச்சுது. படத்தை பார்த்ததும் மாதவனோடு, பாவனாவோடு படமுமே பிடிச்சுட்டுது. இப்ப படத்தில் வராத அழகானதொரு கூட்டு குடும்பம், ஆங்கில கலப்பில்லாத தமிழ் வார்த்தைகளை மட்டுமே பேசவிட்டு படம் எடுத்திருக்காங்க.  ஆனா படம் வெற்றி பெறலைன்னு நினைக்குறேன். 
யுவன் சங்கர் ராஜா இசையில்.. நா.முத்துக்குமார் வரியில் ஒரு சோகப்பாட்டு...

கண்ணில் வந்ததும் நீதான்...

கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி!!

காதல் சொன்னதும் நீதான்..
காயம் தந்ததும் நீதான் கண்மணி!!

நினைவை தந்ததும் நீதான்...

இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி!

உன்னை பிரிந்து போகையிலே
உள்ளம் எரிந்து போகுதடி உயிரே உயிரே
கண்ணில் வந்ததும் நீதான்...

கண்ணீர் தந்ததும் நீதான்....

உன்னுடைய கால் கொலுசு எங்க வீட்டில் கேட்டிடுமா?!
உன்னுடைய புன்சிரிப்பு என் உதட்டில் பூத்திடுமா?!
உன்னுடைய கைவிரலை என் விரல்கள் பிடித்திடுமா?!
உன்னுடைய இதயத்திலே என் துடிப்பு ஒலித்திடுமா?!
உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்...


உன்னுடைய பூ முகத்தை பார்த்து கொண்டே நான் இருப்பேன்!!
உன்னுடைய ஞாபகத்தை விட்டு விட்டால் நான் இறப்பேன்...
உன்னுடைய நினைவுகளை உள்ளுக்குள்ளே தேக்கி வைத்தேன்!!
என்னிடத்தில் எதுவும் இல்லை உயிர் மட்டும் பாக்கி வைத்தேன்..
உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்...

கண்ணில் வந்ததும் நீதான்..
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி!!
காதல் சொன்னதும் நீதான்...
காயம் தந்ததும் நீதான் கண்மணி!!
நினைவை தந்ததும் நீதான்...
இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி!!
உன்னை பிரிந்து போகையிலே
உள்ளம் எரிந்து போகுதடி உயிரே உயிரே!!

கண்ணில் வந்ததும் நீதான்...
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி கண்மணி..

கலங்கடிக்கும் குரலில் ஏற்ற இறக்கத்தோடு ஹரிசரண் குரலை கேட்கும்போது நமக்கும் நம்ம லவ்ஸ் ஞாபகம்லாம் வந்து போகும். வரலைன்னா ரசனையும், காதலும் இல்லா ஜென்மம்ன்னு அர்த்தம்.

சீமான் இயக்கம்ன்னு நினைக்குறேன்.
நன்றியுடன்,
ராஜி(காந்திமதி)

சனி, மே 19, 2018

வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி - கிராமத்து வாழ்க்கை 1

கோடை விடுமுறைன்னா  இப்பத்தி மாதிரி என்ன ஏன் லீவு விட்டாங்கன்னு அப்பா அம்மாக்கள் புலம்புறதும் கிடையாது. ஸ்கூலுக்கே போய் இருக்கலாம்.. வீட்டுல போர் அடிக்குது. ஐ மிஸ் மை ஃப்ரண்ட்ஸ்ன்னு பசங்களும் அலுத்துக்கிட்டது கிடையாது. ஏன்னா, வீட்டில் இருந்தாலும் பெத்தவங்களுக்கு உதவியா இருப்போம். இல்லன்னா, பாதுகாப்பா குளத்தங்கரை ஆத்தங்கரைன்னு வீதிகளில் விளையாடிக்கிட்டிருப்போம். உள்ளூரிலேயே படிச்சதால ஃப்ரெண்ட்ஸ்களையும் மிஸ் பண்ணதில்லை.  சின்ன பிள்ளையில் நான்(ம்) விளையாடிய விளையாட்டுகள் சில.. இப்பத்திய பிள்ளைகளுக்கு இதுலாம் தெரியுமான்னு தெரில...
ரெண்டு பிள்ளைங்க எதிரெதிரா உக்காந்துப்பாங்க. முதல்ல ஒரு காலை நீட்டுவாங்க அதை தாண்டனும். அப்புறம் ரெண்டு கால், அடுத்து கால்கள்மேல் கைகள்ன்னு உசரம் கூடிக்கிட்டே போகும்.  

ஸ்கூல் ஆண்டுவிழா விளையாட்டு போட்டில இந்த விளையாட்டு கண்டிப்பா இருக்கும். சாக்குபைக்குள் நுழைஞ்சுக்கிட்டு ஓடி முதல்ல வரனும். கீழ விழுந்து ஆடிக்கிட்டிருந்த பல்லை பேத்துக்கிட்ட வரலாறு என்னுது. 
கயிறு தாண்டுதல், ஆண், பெண்ன்னு பேதமில்லாம விளையாடும் விளையாட்டு. தனித்தனியா, குழுவான்னு எப்படி வேணும்ன்னாலும் விளையாடலாம். கத்திரின்னு இதில் ஒரு வகை உண்டு. கைகளை கிராஸ்ல கொண்டு போய் விளையாடுவோம், அதில்லாம எதிரில் ஒரு பிள்ளைய நிக்க வச்சுக்கிட்டு குதிக்குறதும் நடக்கும். ரெண்டு பேர் கயிறு ஆட்ட படத்திலிருப்பது போல் ஆட்ட வரிசையா பிள்ளைகள் போறதும் நடக்கும். 

கோலி ஆண்பிள்ளைகளுக்கான விளையாட்டு. ஆனாலும் சின்ன வயசு பொண்ணுங்களும் விளையாடுவாங்க.  எனக்கு ஆரம்பக்கட்ட விளையாட்டு மட்டுமே தெரியும். தோத்துட்டா நம்ம கைமுட்டிய தரையில் அழுத்தி ஒருத்தர் பிடிச்சுக்க, ஜெயிச்சவங்க கோலிய சுண்டி நம் முட்டில அடிப்பாங்க. அதான் இந்த விளையாட்டின் பந்தயம்.

 
y ஷேப்பில் இருக்கும் மரத்துண்டில் ட்யூப்பை ரப்பர் நீளத்துக்கு கட்டி, அதுக்குள் கல்லை வச்சு குறிபார்த்து மாங்கா, கொய்யான்னு அடிப்போம். ஓணான், தவளை, காக்காலாமும் அடிச்சிருக்கோம். அதுலாம் சொன்னா இப்ப அசிங்கம். இதுக்கு பேரு உண்டி வில்


ரெண்டு பனங்காய் நடுவில் குச்சிய வச்சி செஞ்ச பனங்காய் வண்டில நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம்ன்னு போய் இருக்கோம். இதுல ட்ரிபிள்ஸ் போன அனுபவமும் உண்டு. 
கல்லு மேல கல்லை அடுக்கி வச்சி பாலால் குறி பார்த்து அடிச்சு விழ வைக்கனும், இது நான் விளையாடியதில்லை. வேடிக்கை மட்டும் பார்த்திருக்கேன். 


தரையில் லேசா பள்ளம் பறிச்சு, சின்ன குச்சிய குறுக்கால வச்சு, கொஞ்சம் பெரிய சைஸ் குச்சியால சின்ன குச்சிய மேல பறக்க விட்டு தரையை தொடும்முன் மீண்டும் அடிச்சு விளையாடும் பில்லு கோட்டி அல்லது கோட்டி பில்லு
ஆண் பிள்ளைகளுக்கான விளையாட்டு பம்பரம். நூல் சுத்தி பம்பரம் விடத்தெரியும் எனக்கு.  சுத்துற பம்பரத்தை எடுக்கவோ இல்ல பந்தயம் கட்டி வட்டத்திற்குள் இருக்கும் பம்பரத்தை அடிக்கவோ தெரியாது எனக்கு. 

கயிறின் நடுவே துணியை கட்டி  கயிறின் முனையை ரெண்டு குரூப் இழுக்குறதுக்கு பேரு கயிறு இழுத்தல்.  நாங்க, கொய்யாப்பழம், எலந்தை பழம்லாம் துணிக்கு பதிலா கட்டி இழுப்போம். ஜெயிச்சவங்களுக்கு அதான் பரிசு. இப்பத்திய சினிமாக்கள் மூலமா இது பசங்களுக்கு தெரியும். ஸ்கூல்ல நடக்கும் விளையாட்டு போட்டில இதும் இருக்கும். 
காய்ந்த பனை அல்லதுதென்னை  ஓலைல செஞ்ச காத்தாடியை  ஒரு குச்சில முள்ளைக்கொண்டு சொருகி வச்சு,  தெருதெருவா ஓடி இருக்கேன்.
சாலை வசதி இல்லாததால் அடிக்கடி சைக்கிள் டயர் பஞ்சர் ஆகும். பெரும்பாலும் அது எல்லார் வீட்டிலயும் இருக்கும்.  சின்ன குச்சியை வச்சி தட்டிக்கிட்டே ஓட்டிய டயர் வண்டி. கைகால்லாம் டயர் கருப்பு ஒட்டி வீட்டில் வெளக்கு மாத்தடி வாங்குனதுலாம் மறக்கமுடியுமா?!

ரெண்டு பேர்  எதிரெதிரே நின்னுக்கிட்டு கைகளை  தூக்கிக் கோர்த்துக்கிட்டு நிக்க,  முன்னாடி அந்த கைகளுக்குள் போய், கைதூக்கி  நிக்குறவங்களை  எட்டு மாதிரி சுத்தி வரனும்.  அப்படிசுத்தி வரும்போது ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்ததாம்... ன்னு பாடுவாங்க. எட்டு  இல்ல பத்து பூ வரைக்கும் சொல்லிட்டு பாட்டு முடிஞ்சதும் டப்புன்னு கையை இறக்க கைகளுக்குள் நுழைஞ்சவங்க மாட்டிப்பாங்க. அப்படி மாட்டிக்கிட்டவங்க. இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கான்னு கொஞ்சூண்டு கைகாட்டுவாங்க. இவங்க மாட்டேன்னு சொல்லி பேரம் பேசி கைகளை பெருசா விரிப்பாங்க. 
அப்படியும் பேரம் படியாம உன் பொண்டாட்டி பேரென்னன்னு பையன்கிட்டயும், உன் புருசன் பேர் என்னன்னு பொண்ணுக்கிட்டயும் கேட்டு அவங்க சொல்லும் பேர் உள்ள ஆளையும்(குழுவில் இருக்கும் ஆளு பேரைதான் சொல்லனும், நம்ம ஆளு பேர்லாம் சொல்லப்படாது), அவங்களையும் கைக்கோர்த்து நிக்க சொல்லிட்டு மத்தவங்க விளையாட்டை தொடர்வாங்க. 
ட்ரெயின் விளையாட்டு. ஒருத்தர் பின்னாடி ஒருத்தர்ன்னு விளையாடியது. இது எல்.கே.ஜி லெவல்  விளையாட்டு. 
தென்னந்துடைப்ப குச்சியில் நியூஸ் பேப்பர் ஒட்டி காத்தாடி செஞ்சு ரெண்டு மூணு மீட்டர் நூல் கொண்டு இணைச்சு பட்டம் பறக்கவிட்டு  படத்துல காட்டுற மாதிரி வானளாவ ஏன் பறக்கலைன்னு செல்லூர் ராஜுக்கே டஃப் காம்பெட்டீஷன் கொடுத்த ஆட்கள் நாங்க. 

பரிட்சைல முட்டைதான் வாங்கபோறோம்ன்னு சொல்லாம சொல்லி வீட்டினரை அலர்ட் செய்ய ஊதிய பப்பிள்ஸ். சோப்பு தண்ணி கரைக்குறோம்ன்னு சொல்லி, அம்மா ஈடுப்பு நோக கிணத்துல இருந்து கொண்டு வந்த தண்ணிலாம் சோப்பாக்கி பாடாய் படுத்தி இருக்கேன். ஊதுற முட்டை பெருசாவும், சீக்கிரத்திலும் உடையாம இருக்க, துளி எண்ணெய் சேர்க்க ஆலோசனை கொடுத்த ஆட்களும் உண்டு. 

கிராமத்து வாழ்க்கை இன்னமும் தொடரும்...

நன்றியுடன்,
ராஜி (காந்திமதி)

வெள்ளி, மே 18, 2018

கொலுசுக்கு ஆசைப்பட்ட லலிதாம்பிகை - அறிவோம் ஆலயம்


பொதுவா வீடுகளில் காலையிலும், மாலையிலும் விளக்கேத்தி வழிபடும் நேரத்தில் சொல்லப்படும் துதிகளில் லலிதா சகஸ்ரநாமமும் ஒன்னு. ஸ்ரீ மாத்ரே நமஹ’ என ஆரம்பிக்கும் இந்த அம்பிகை துதி, மற்றெல்லா துதிகளையும்விட  அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன. வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை. பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள். இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா சகஸ்ரநாமம் அமைந்துள்ளது.
லலிதா சகஸ்ரநாமம் அழகு தமிழில்...
லலிதா சகஸ்ரநாமத்தின் சிறப்பே, ஒருமுறை சொல்லப்பட்ட அம்பிகையின் நாமம் இன்னொரு முறை சொல்லப்பட்டிருக்காது. இதில் மட்டும்தான் அம்பிகையின் அழகு, தோற்றம், வரலாறு, அவளை வழிபடவேண்டிய முறை, யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபடால் கிடைக்கும் பலன்கள் என அனைத்தும் வாக்தேவதைகளால் சொல்லப்பட்டிருப்பதால் இது நால்வகை வேதத்துக்கு ஒப்பானதாகும். 
பண்டாசுரனின் தொல்லை அதிகரிக்கவே அதை தாங்கமுடியாத தேவாதி தேவர்கள் யாகம் வளர்த்தி அம்பாளை வேண்டினர். அம்பிகை எதும் பதிலளிக்காமல் போகவே தங்கள் உயிரை யாகக்குண்டத்தில் அர்ப்பணிக்க தயாராகினர். அப்பொழுது ஞானமாகி குண்டத்திலிருந்து ஆதிசக்தியானவள் ஸ்ரீலலிதாவாக தோன்றினாள். லலிதாம்பிகை லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என மும்பெருந்தேவிகளும் இணைந்த அம்சம்.   பண்டாசுரனுடன் போரிட்டு அவனை அழித்து தேவர்களை காத்தாள். அசுர வதம் முடிந்தும் உக்கிரமாய் இருந்த அன்னையை சாந்திப்படுத்தும் பொறுப்பு சிவனிடம் வந்து சேர்ந்தது. உலக நலன் வேண்டி உக்கிரம் குறைய, அன்னையை, மனோன்மணின்ற  பெயருடன்  ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்ய பணித்தார். அன்னையும் இத்தலம் வந்து தவமிருந்து தன் உக்கிரம் குறைந்தாள். 
உக்கிரம் குறைந்த அன்னை, தன் அழகிய முகத்திலிருந்து  வஸினி, காமேஸ்வரி, அருணா, விமலா,ஜெயினீ, மோதினீ, சர்வேஸ்வரீ, கௌலினி என்ற எட்டு ‘வசின்யாதி வாக் தேவதைகளை உண்டாக்கி, 1008 தனது திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளை இட்டாள்.   ஸ்ரீ மாத்ரே எனத் தொடங்கும் லலிதா சகஸ்ரநாமம் உண்டானது. இதை அன்னை, ஞானக்கடவுளாம்  ஹயக்கீரிவருக்கு அன்னை கொடுத்தருளினார்.  சக்திகளுக்குள் ஸ்ரீலலிதா போல் வேறெந்த சக்தியும் இல்லைன்னு  சொல்வாங்க. மந்திரங்களில், வித்யையைப்போல், நகரங்களில் ஸ்ரீபுரம் போல், வித்யை உபாசகர்களில்  சிவனைப்போல், சகஸ்ரநாமங்களில் லலிதா சகஸ்ரநாமம் என மேன்மையானவைகளை பட்டியலிட்டிருக்காங்க.  இந்த ஸ்லோகம் பாராயணம், ஹோமம், அர்ச்சனை போன்ற முறைகளில் வழிபடப்படுகிறது.

நமது முதுகுத்தண்டின் அடியில், கிண்ணம் போன்ற அமைப்பு உள்ளது. இதுதான் 'மூலாதாரம்'. நாம் மனதை ஒருநிலைப்படுத்தி, சகஸ்ரநாமம் சொல்லும்பொழுது, நாபிக்கடியில் இருக்கும் சக்தியை, மந்திரத்தின் அழுத்தம் தூண்டிவிடுகிறது. தூண்டப்பட்ட சக்தியானது, மேலெழும்பி, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்யை, பிறகு சகஸ்ராரம் என்கிற கடைசி நிலையை வந்தடைகிறது. சகஸ்ராரம் என்னும் சிகரத்தில்தான் சிவன் இருப்பதாகக் கூறப்படுகிறது. சகஸ்ராரத்தில், அதாவது சிகரத்தில், கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்தில் அமிர்தம் இருக்கு. கீழிருந்து எழும்பிய சக்தி, சிகரத்தில் உள்ள சிவனோடு சேரும்போது, கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்திலிருந்து, அமிர்தம் கொட்டுவதாக அறியப்படுகிறது. அப்பொழுது, அவள் சிவசக்தி ஸ்வரூபிணியாகவே நமக்குக் காட்சி கொடுப்பாள் என்று கூறப்படுகிறது.
கங்கை முதலிய புண்ணிய நதிகளில்  மூழ்கிய பலன் கிடைக்கும். காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்டை செய்த பலன், சூரிய, சந்திர கிரகண  காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்த பலன்,  பஞ்சக்காலங்களில்  கிணறு வெட்டுதல், தவறாது அன்னதானம் செய்ததன் பலன், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது அர்த்தம் உணர்ந்து, சரியான உச்சரிப்போடு லலிதா சகஸ்ரநாமப் பாராயணம் செய்வது. அவத்தை நீக்கும். 
பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படித்துவர  நோய்கள் நீங்கும். தீய சக்திகளின் உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்து விடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும். பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின் அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும். எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த லலிதா சகஸ்ரநாமம் உருவான ஊர்தான் திருமீயச்சூர். திருமியச்சூரில் குடிக்கொண்டிருக்கும்  மேகநாத சுவாமி, சகலபுவனேஸ்வரர்  ஆலய அமைப்பு, வரலாற்றை பார்த்தோம்.  இன்னிக்கு, லலிதா சகஸ்ரநாமத்தை அருளிய லலிதாம்பிகை கோவில் பத்தி பார்க்கலாம். பொதுவா, எல்லா கோவில்களிலும், ஆண்பால் தெய்வத்தை வணங்கிய பிறகே பெண்பால் தெய்வத்தை வணங்குதல் முறை., மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் மாதிரி வெகுசில கோவில்களில் மட்டுமே இந்த நியதி மாறுபடும். அந்த வெகுசில கோவில்களில் திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலும் ஒன்று. 
ராஜகோபுரத்தை கடந்தால், நமக்கு வலப்பக்கத்தில்  வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும் தனிச்சன்னிதியினுள் வலது காலை மடித்து வைத்த நிலையில் அமர்ந்திருக்கும் லலிதாம்பிகையை தரிசிக்கலாம். இவளுக்கு சௌந்தரநாயகி, சாந்தநாயகின்ற வேறு பேர்கள் உண்டு. அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு   இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜசிம்மாசனத்தில் அமர்ந்து  அருளாட்சி செய்கிறாள்.  இதுப்போல மடித்து வைத்தை காலோடு அமர்ந்த கோலத்தில் இறைவியை காண்பது அரிதினும் அரிது.  அவள் அமர்ந்திருக்கும் கருவறை ஒரு ராஜ தர்பாரை நமக்கு நினைவூட்டும். 
லலிதாம்பிகையிடம்  உபதேசம் பெற்றவர் ஹயக்கீரிவர். ஸ்ரீஹயக்ரீவர் அகத்தியருக்கு லலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் செய்யும் வேளையில், ஸ்ரீலலிதாம்பிகையை தரிசிக்க சிறந்த இடம் எது என அகத்தியர் வினவினார். 'அருணனும், சூரியனும் வழிபட்ட திருமீயச்சூர் சென்று, அங்கு லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொன்னால் மிகுந்த பலன் கிடைக்குமென  ஸ்ரீஹயக்ரீவர் கூறிளினார். அவ்வாறே அகத்தியரும், தன் மனைவி லோபமுத்ராவுடன்   இத்தலம் வந்து லலிதா சஹஸ்ரநாமம் ஜபித்து, அர்ச்சனை செய்து அன்னையின் தரிசனம் பெற்றார். அகத்தியர் பெருமானும் இத்தலத்தில் அன்னையை ஆராதித்து அழகிய செந்தமிழில் ஸ்ரீலலிதா நவரத்தின மாலையைப் பாடியுள்ளார். பௌர்ணமி தினத்தன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என இவற்றை மனமுருக பாட அன்னையின் அருள் கிடைக்கப் பெறலாம்.
முத்து, வைரம், வைடூரியம், கோமேதகம், மரகதம், பவளம், புஷ்பராகம், மாணிக்கம், நீலமென்ற நவரத்தினங்களை அம்பிகையாய் நினைத்து அவளை வர்ணித்து அழகு தமிழில்  பாடப்பட்டதே  லலிதா நவரத்ண மாலையாகும்.  
ஆபரணங்கள் பல அணிந்திருந்தும், அன்னைக்கு கொலுசு அணியாததால் பெரும் மனக்குறை ஏற்பட்டது போலும். தன் மனக்குறையை தீர்த்துக்கொள்ள, பெங்களூரை சேர்ந்த பக்தை ஒருவரின் கனவில் தோன்றிய அன்னை,  ”தான் எல்லாவிதமான அணிகலன்களையும் அணிந்துள்ளதாகவும், கொலுசு மட்டும் அணியவில்லை, அதனை தனக்கு அணிவிக்குமாறு கூறி மறைந்திருக்கிறார். வைணவப்பெண்ணான அந்த அம்மாள், சைவக்கடவுள் தன் கனவில் வந்ததால் குழப்பமும், ஆனந்த அதிர்ச்சியும் அடைந்த அந்த அம்மாள், தனது குழப்பம் தீர,  எல்லா ஊர் அம்மன் படங்களையும் வரவைத்து ஆராய்ந்து இருக்கிறார்
தன் கனவினில் வந்தவள் திருமீயச்சூரில் ஆட்சி செய்யும் லலிதாம்பிகை என்பதை அறிந்து, அழகான கொலுசொன்றை செய்துக்கொண்டு  திருமீயச்சூர் வந்து அங்கிருந்த கோவில் நிர்வாகிகளிடம் தனது கனவினை கூறி கொலுசை கொடுத்தார். பால், பழம் என பலவித அபிஷேகங்களால் கொலுசினை மாட்டும் துளை அடைத்துவிட்டிருந்த காரணத்தால், பூசாரி, கொலுசினை அம்மன் பாதத்தில் அணிவிக்க முடியாது, எனக்கூறி பக்தையினை சந்தேகித்தனர். பக்தையும் விடாப்பிடியாய் தன் கருத்தை முன்வைக்க, அம்மனின் கால்களை பரிசோதிப்பதென முடிவானது. 

ஆராய்ச்சியின் முடிவில் அம்மன் பாதத்தில் கொலுசிட வசதியாய் துவாரம் இருந்ததைக் கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இதன் பின்னரே அன்னையின் திருவிளையாடலை புரிந்துக்கொண்டு அம்பாளுக்கு கொலுசு அணிந்து மகிழ்ந்தனர். தான் பிறந்த பலனையும் அடைந்ததாக கொலுசிட்ட பெண்ணும் மகிழ்ந்தார். அன்றிலிருந்து இங்கிருக்கும் அம்பிகைக்கு நேர்த்திகடனாய் கொலுசு அணிவிப்பது வழக்கமானது. 
இக்கோவிலில் இக்கோவிலில் விஜயதசமியன்று, லலிதாம்பிகைக்கு எதிரில் பெரிய வாழை இலையில் சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளிசாதம் படையலாய் படைக்கப்படும்,  15 அடி நீளம், 4அடி அகலம், 1 1/2அடி ஆழத்தில் இருக்குமாறு தயார் செய்யப்படும் இந்த படையலின் நடுவே, பள்ளம் பறித்து இரண்டு டின் நெய் குளம்போல்  கொட்டப்படும்.  அம்மனுக்கு அபிஷேகம் முடிந்து திரை விலக்கப்படும்போது அம்மனின் உருவம் நெய் குளத்தில் தெரியும், இதைக்காண மக்கள் திரண்டு வருவர்.  லலிதாம்பிகை கோவிலின் தலவிருட்சம் வில்வம், தீர்த்தம் சூர்யபுஷ்கரணியாகும்.   இத்திருக்கோவில் திருவாரூர் மாவட்டத்திலிருக்கும் நன்னிலம் அருகே இருக்கும் பேரளத்திலிருந்து 2கிமீ தூரத்திலிருக்கு. காலை 7 மணி முதல் 12.30 வரையும், மாலை 4.30முதல் இரவு 8.30 வரை திறந்திருக்கும். 
எவர் எத்தினமூம் இசைவாய் லலிதா
நவரத்னமாலை நவின்றிடுவார்
அற்புதசக்தி எல்லாம் அடைவர்
சிவரத்தினமாய் திகழ்வரே!!
நன்றியுடன்,
ராஜி(காந்திமதி)

வியாழன், மே 17, 2018

ஜிமிக்கி கம்மல்.. ஜிமிக்கி கம்மல் - கைவண்ணம்


சில்க் த்ரெட் நூல்ல செய்யுற  ஜுவல்சுக்குதான் இப்ப மவுசு அதிகம். பார்க்க செம அழகு. நல்ல ஜொலிஜொலிப்பா இருக்கும். எல்லாவித கலர்லயும் செய்யலாம். வளையல், கம்மல், மணிமாலை, ஹேர்க்ளிப்ன்னு எல்லாமே செய்யலாம். பழகிட்டா செம ஈசி.. இதுக்கு மூலப்பொருட்கள் எல்லா பேன்சி ஸ்டோர்லயும் கிடைக்குது. அதிகபட்சம் 25 ரூபாய்ல ஒரு கம்மல் செய்யலாம். ஆனா, ஆரம்பவிலை 120ரூபா. வேலைப்பாடு அதிகரிக்க, அதிகரிக்க விலை கூடும். ஒரு கம்மல் செட்டை ஒரு மணி நேரத்துல செஞ்சுடலாம்...

 கம்மல் செய்ய பிளாஸ்டிக்ல ஜிமிக்கை  பேஸ் கிடைக்குது.

ஸ்கேல் இல்லன்னா நோட்ல நூலை சுத்தி மொத்தம் 15 இழை இருக்குற மாதிரி எடுத்துக்கனும்....

இடைவெளி விட்டு மேல படத்துல இருக்குற மாதிரி நூலை கோர்த்துக்கிட்டு வரனும்.

நூலை எல்லா இடத்துலயும் சுத்திட்ட பிறகு கம்மலுக்குள் க்ளூ வச்சு நூலை ஒட்டி மிச்ச மீதி நூலை வெட்டிடனும்.

 கம்மல் பேஸ் ரெடி.....


 எல்லாவித ஜுவல்சும் இந்த மாதிரி நூல் சுத்துறதுதாலதான் வரும்.


 ரெண்டு ஐபின்னை ஒன்னுக்குள் ஒன்னை ஜாயின் பண்ணிக்கனும்.


 ஒரு கம்பில முத்தை கோர்த்துக்கிட்டு செஞ்சு வச்சிருக்கும் கம்மலை கோர்த்துக்கனும். 

 மேல பீட் கேப்பை கோர்த்து மிச்ச மீதி கம்பியை வெட்டி வளைச்சுக்கனும்.

 அதேமாதிரி இன்னொரு பக்கத்து கம்பில இன்னொரு முத்தை கோர்த்து இன்னொரு கம்மலை கோர்த்து க்ளூ போட்டு ஒட்டிக்கனும். 

எப்ப பாரு ஜிமிக்கை கம்மல்ன்னு செஞ்சு போட்டுக்குறதுக்கு பதிலா புது டிசைன்ல தொங்கட்டான் ரெடி.  


ரெண்டு கம்மலும் ஜாயின் பண்ண இடம் தெரியாம இருக்க ரன்னிங்க் ஸ்டோன் ஒட்டிக்கனும்.  அதை சுத்தி சின்ன சைஸ் கோல்ட் முத்து செயினை சுத்தனா தொங்கட்டான் ரெடி.


 கம்மல் பேஸ்ல க்ளூ தடவிக்கனும்... சின்ன பிளாஸ்டிக் ரவுண்ட்ல நூலை சுத்தி கம்மல் பேஸ்ல ஒட்டிக்கிட்டு நமக்கு விருப்பப்பட்ட மாதிரி கல், முத்துன்னு வச்சு அலங்கரிச்சுக்கலாம். 


 தொங்கட்டான் ரெடி...

வட்ட வடிவ கம்மல் பேஸ்ல சில்க் த்ரெட்டில் இருவது இழை எடுத்திக்கிட்டு நெருக்கமா சுத்திக்கிட்டு ஃபேஃப்ரிக் க்ளூவை வைச்சுக்கனும்.
இன்னொரு ஃபேஃப்ரிக் க்ளாத்லவட்டவடிவமா வெட்டிக்கிட்டு கம்மல் பேசை வச்சு ரெண்டுத்தையும் ஒட்டிக்கனும். 

என் பசங்களுக்கு கருப்பு கலர்ன்னா இஷ்டம். அதனால பெரியவளுக்கு ஒன்னு. சின்னவளுக்கு ஒன்னு.. 
என் பசங்களுக்கு கருப்பு கலர்ன்னா ரொம்ப இஷ்டம்... அதுல ஜிமிக்கி செஞ்சு தரச்சொன்னாங்க. கைவண்ணம் பகுதில பதிவிட ஒன்னும் செய்யலியேன்னு இருக்கும் நேரத்துல கேட்டதால சுடச்சுட செஞ்சு பதிவு போட்டாச்சு. 

நன்றியுடன்
ராஜி (காந்திமதி).