புதன், ஜூலை 19, 2017

மூத்த மகளை என்ன சொல்லி வாழ்த்த?!

தூயா பிறந்து 20 நாட்களில் என் உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு போனபோது எடுத்த படம்.  என் அப்பாக்கு தெரிந்ததும் ஃபோட்டோ எடுத்தா ஆயுசு குறைவு, அதுலயும் குழந்தை தூங்கும்போது எடுத்திருக்கியே!! அறிவில்லையா உனக்குன்னு புலம்பித் தீர்த்துட்டாரு.

20 வருசங்கழிச்சு எனக்கப்புறம் பிறந்த குழந்தைன்றதால மேடம்க்கு ரொம்ப மரியாதை, கவனிப்பு. அவ இருக்கும் இடத்தில் ஃபேன் ஓடிட்டே இருக்கனும். எப்பவாவது கரண்ட் நின்னுட்டா ஆள் மாத்தி ஆள் விசிறிக்கிட்டே இருப்போம். தன்னோட எட்டாவது மாசத்தில் என் ஃப்ரெண்ட் கல்யாணத்தின் போது... வேர்த்துக் கொட்டி கசகசன்னு இருக்குன்னு என் அம்மாக்கிட்ட சொல்லுது..,


முதல் பிறந்த நாளின் போது.., வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தன் அப்பாவோடு...,  மேடம் அப்பதான் நடக்க ஆரம்பிச்சாங்க. அதனால, ஒரு நிமிசம் கூட நிக்காம ஓடிட்டே இருப்பாங்க. இந்த ஃபோட்டோவை நான் எடுக்கப் பட்டப் பாடு இருக்கே! ஸ் அபா!

 ஒரு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, அவ அப்பா சட்டையில் குத்தியிருந்த தேசியக்கொடியை பார்த்து தனக்கும் வேணுமின்னு அடம்பிடிச்சு தன் மார்பில் குத்திக்கிட்டா. எனக்குதான் குண்டூசி குத்திடுமோன்னு பயம்.

பேத்தியை ஈ, எறும்பு மொய்த்தால்கூட கலங்கும் என் அப்பா, காது குத்தி வலியில் அழும்போதும் சிரித்தப்படி.. பெரியவ பொறந்த சமயத்துல என் அப்பாவோட பங்காளி வீட்டுல யாரோ இறந்துட்டாங்க. அதனால,  அவ பேர் சூட்டும்போது புது துணியும், தங்கமும் சீர் செய்யக்கூடாது. குழந்தையோட மூணாவது மாசம் செய்தால் போதும்ன்னு என் மாமியார் சொல்லிட்டாங்க. முதல் பேத்தி கழுத்துல எதுமில்லாதது என் அப்பா கண்ணை உறுத்த, புதுசுதானே போடக்கூடாதுன்னு, என் அம்மா தாலிக்கொடியிலிருந்த கால்காசை எடுத்து ஒரு சிவப்பு கலர் கயிறில் கோர்த்து பாப்பா கழுத்தில் போட்டுவிட்டார்.

மூணாவது மாசம் கொலுசு, மோதிரம், செயின்லாம் போட்ட பிறகு, அந்த சிவப்பு கயிற்றை கழட்டி பீரோ லாக்கர்ல வச்சுக்கிட்டார். நான் என் வீட்டுக்குப் போனப்பின், பேத்தி நினைவு வரும்போதெல்லாம் அந்தக் கயிற்றை வாசம் பிடிச்சுப்பார். குழந்தைக்குண்டான வாசனை, சோப்பு, பவுடர், பாப்பாவோட வேர்வைலாம் சேர்ந்து கலவையா ஒரு வாசனை அந்தக் கயிற்றில் இருக்கும். அதைத்தான் வாசம் பிடிப்பார். ரொம்ப நாளாய் இருந்துச்சு. வீடு மாத்தும்போது அந்தக் கயிறு மிஸ்ஸிங். அதுக்கு எனக்கும், என் அம்மாவுக்கும் விழுந்த டோஸ் இருக்கே! அப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா அதை சொல்லி மாளாது.


அக்காவும், தங்கையும் எப்பவும் திக் ஃப்ரெண்ட்ஸ். ஒண்ணை ஒண்ணு பிரியாது. அவங்களுக்குள் எதும் மறைச்சுக்கவும் மாட்டாங்க. அவங்க இருவர் உலகத்துக்குள்ளும் என்னாலயே நுழைய முடியாது.

தூயாக்கு தம்பின்னா கொள்ளை இஷ்டம்..., ஆனா, அப்புதான் அக்காவோடு மல்லுக் கட்டுவான் காரணம் அவனுக்கு அவள்மீது கொள்ளை அன்பு மட்டுமல்ல. எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவா. சின்ன அக்கா மாதிரி திருப்பி அடிக்காத காரணமும்கூட..., ஆனா இப்ப எலியும் பூனையும் போல....


விளையாட்டு பிள்ளையாய் இத்தனை காலம் கடத்தினாய்...... போனது போகட்டும்... இனியாவது பொறுப்பான பெண்ணாய் அப்பாவுக்கும், தாத்தா, பாட்டி, சுற்றத்தார் மெச்ச வாழனும்ன்னு வைராக்கியம் கொண்டு அதன்படி செல்..... 

நன்றியுடன், 
ராஜி. 

செவ்வாய், ஜூலை 18, 2017

பீர்க்கங்காய் தோல் துவையல் - கிச்சன் கார்னர்

பீர்க்கங்காயில் கூட்டு, பொரியல், சாம்பார், மசியல்ன்னு செய்வோம். அப்படி செய்யும்போது பீர்க்கங்காயின் தோல் சீவி எறிஞ்சுடுவோம். அப்படி அந்த தோலை தூக்கிப்போடாம முன்னலாம் துவையல் செஞ்சு சாப்பிடுவோம். இப்பலாம் அப்படி செய்யுறதில்ல.... பீர்க்கங்காயின் நன்மைகளை ஏற்கனவே போட்ட இந்த பதிவுல போய் பார்த்துட்டு வாங்க. 

தேவையான பொருட்கள்..
பீர்க்கங்காய் தோல்
காய்ந்த மிளகாய்,
உ.பருப்பு
கடலைப்பருப்பு
தனியா
உப்பு,
புளி
தேங்காய்

பீர்க்கங்காய் தோல் சீவி எடுத்துக்கோங்க..
வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும்  உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா  சேர்த்து சிவக்க விடுங்க. 


சீவி வச்சிருக்கும் பீர்க்கங்காய் தோலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்க..

தேங்காய், உப்பு சேர்த்து வதக்குங்க...

புளி சேர்த்து வதக்குங்க

மிக்சில இல்ல ஆட்டுக்கல்லுல கொரகொரப்பா அரைச்சு எடுத்தா சூப்பர் துவையல் ரெடி. தயிர்சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கு ஏத்த டிஷ்.

அம்மில வச்சு அரைச்சு முடிச்சதும், அம்மியில ஒட்டியிருக்கும் துவையலில் சாதம்போட்டு பிசைஞ்சு உருட்டி அம்மா கொடுப்பாங்க.... ம்ம்ம்ம்ம்ம் யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மி.... துவையல் ருசிச்சது அம்மா கைமணமா?! இல்ல அம்மிக்கல்லா? இல்ல அம்மாவின் பாசமான்னு இன்னும் தெரில.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466799

நன்றியுடன்,
ராஜி.


திங்கள், ஜூலை 17, 2017

ஆடி மாதம் தம்பதிகளை பிரித்து வைப்பதன் காரணம் - ஐஞ்சுவை அவியல்

 இந்தா புள்ள. மணி எட்டாகுதே! இன்னும் காஃபி கைக்கு வந்தபாடில்ல. 

இன்னிக்கு ஆடி மாசம் பொறந்திருக்கு மாமா. அதனால, நம்ம வீட்டு வாசல்லயும், எதிர்வீட்டு வாசல்லயும் கோலம் போட்டு செம்மண் இழுக்க நேரமாகிட்டுது. 

ஏன்?! பக்கத்து வீட்டு புள்ளைக்கு உடம்புக்கு முடியலியா?!

ம்ஹூம். அவளுக்கு இது தலை ஆடி. அதான் அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கா. 

சரி, ஆடி மாசம் புதுப்பொண்ணை அம்மா வீட்டுக்கு கூட்டி போறாங்களே! ஏன்ன்னு தெரியுமா?!

ம் தெரியுமே. ஆடி மாசம் புருசனும் பொண்டாட்டியும் ஒன்னாயிருந்தா சித்திரை மாசம் குழந்தை பொறக்கும்.   அப்ப கத்திரி வெயில் தாயையும் , குழந்தையையும் பாடாய் படுத்தும் அதான்.

இது எல்லாரும் சொல்றது. அப்படின்னா குடும்பக்கட்டுப்பாடு செஞ்சுக்கும்வரை பொண்ணுங்களை அவங்கம்மா வீட்டுக்கு அனுப்பனுமே. முதல் ஆடிக்கு மட்டும் ஏன் கூட்டி போறாங்க?! மத்த ஆடிக்குலாம் ஏன் கூட்டிப்போறதில்ல?! அப்ப ரெண்டாவது குழந்தை சித்திரை வெயில்ல பொறந்தா அவஸ்தைப்படாதா?! இல்ல ரெண்டாவது ஆடில இருந்து ஆடி மாசம் மட்டும் கருத்தரிக்காம போய்டுமா?!

ம்க்கும் இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா எப்படி?! என்ன காரணம்ன்னு நீயே சொல்லு மாமா.இந்த ஆடி மாசத்துலதான் விவசாயமும், இறை வழிபாட்டுலயும் மனசும், உடம்பும் லயிக்கனும்ன்னுதான் புதுப்பொண்ணை அம்மா வீட்டுக்கு கூட்டிப்போறதும், கல்யாணம் மாதிரியான சுபநிகழ்ச்சிகளை செய்யாம இருக்குறதும்.. அந்த காலத்தில் விவசாயத்தை நம்பித்தான் ஜீவனம் நடந்துச்சு. ஆடிப்பட்டம் தேடி விதைன்னு ஒரு பழமொழியே இருக்கு. ஆடியில உழவு, சேடை ஓட்டுதல்,  நடவு, விதைத்தல், நடுதல்ன்னு விவசாயம் சார்ந்த பணிகள் ஏராளம்.  ஆடியில் விவசாய வேலைகளை ஆரம்பிச்சாதான் தீபாவளி, கார்த்திகை, பொங்கல் மாதிரியான பண்டிகை நேரங்களில் அறுவடை நடந்து பண வரவு இருக்கும். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண வைபவங்களுக்குப் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும்.  அதேமாதிரி ஆடிமாசம் விதை வாங்க, வரப்பு சீர் செய்ய, கிணறை சரிப்பார்க்க, ஏர் உழ, நடவு மாதிரியான வேலைகளுக்கு அதிகளவு பணம் தேவைப்படும். அதனாலதான் அந்த மாசம் சுப காரியம் எதும் நடத்தாம விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. இதுமட்டுமில்லாம இந்த மாசத்தில பித்ரு கடன் செய்ய ஆடி அமாவாசை, ஆடிக்கிருத்திகை, கருட பஞ்சமி, நாகபஞ்சமி, ஆடிப்பெருக்கு, ஆடித்தபசு, ஆடிப்பூரம், தீமிதி, கூழ் வார்த்தல்ன்னு வரிசையா விசேச தினம் வரும். இந்த நாளில் புதுசா கல்யாணம் ஆனவங்க ஒன்னா இருந்தா மனசு சஞ்சலப்படும்ன்னுதான் புது பொண்ணை அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்குறாங்க.  ஒரு வருடத்தை போக சம்பிராதாயம், யோக சம்பிராதாயம் என ரெண்டா பிரிப்பாங்க. ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான ஆறு மாசமும் யோக சம்பிராதயம்.  இந்த ஆறு மாசம் தெய்வ வழிபாடு உச்சத்துல இருக்கும்.  தை முதல் ஆனி மாதம் வரையிலான ஆறு மாசத்தை போக சம்பிராதயம்ன்னு சொல்வாங்க கல்யாணம், காது குத்த, விருந்துன்னு சந்தோசத்தை அனுபவிக்கும் காலம். இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியா?! ஆடி மாசத்துல ஏன் அம்மா வீட்டுக்கு பொண்ணுங்களை அனுப்புறாங்கன்னு..

ம்ம்ம் இப்ப தெரிஞ்சுக்கிட்டேன் மாமா. வெள்ளெருக்கஞ்செடி வீட்டில் இருந்தா நல்லதுன்னு சொல்லுறாங்களே! உண்மையா மாமா.எனக்குதான் இந்த மூட நம்பிக்கை பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்ல. எனக்கு தெரிஞ்சு கருவேலம் மரம் தவிர எல்லா செடியுமே நல்லதுதான்.  துளசி செடி இன்னும் நல்லது ஏன்னா அதுதான் ஒருநாளைக்கு 20 மணி நேரம் ஆக்சிஜனை வெளியிடுது. 

ம்க்கும் தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லு. அதைவிட்டு பெரியார் மாதிரி பேசாத.

ம்க்கும். சாமி இல்லன்னு என்னிக்காவது சொல்லி இருக்கேனா?! நமக்கு மிஞ்சுன சக்தி ஒன்னு இருக்கு. அதை கடவுள்ன்னு ஏத்துக்குறேன்.அதுக்காக கடவுள் பேரை சொல்லி எதாவது சொன்னா ஏத்துக்கமாட்டேன். வெள்ளெருக்கஞ்செடி வச்சிட்டு படிக்காமயே இருந்தா ப்ளஸ்டூவுல ஸ்டேட் பர்ஸ்ட் வர முடியுமா?! இல்ல வேலைக்கு போகாமயே சோறு கிடைச்சிடுமா/! மனுசனோட திருப்திக்கு இதுலாம் சொல்லிக்குறது. உண்மையான பக்‌ஷியோட ஒரு நிமிசம் சாமி கும்பிட்டு உன் செயல்ல உண்மையா இருந்தா எல்லா நல்லதா நடக்கும். உன் திருப்திக்காக சொல்றேன். எருக்கைல நீல எருக்கை, ராம எருக்கை, வெள்ளெருக்கைன்னு மொத்தம் 9 வகையான எருக்கஞ்செடி இருக்கு. எருக்கஞ்செடி தண்ணி ஊத்தாம, மழையும் பெய்யாம இருந்தாலும் 12 வருசம் சூரிய ஒளியில் இருக்கும் காத்தை உறிஞ்சு வளரும். வெள்ளெருக்கை பூவால் விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கை பட்டையை திரியாக்கி விளக்கு போஒட வீட்டிலிருக்கும் தீய சக்திகள் நீங்கும். வெள்ளெருக்கை வேர்ல ஜெபமாலை செஞ்சு போட்டுக்கிட்டு மந்திரம் சொன்னால் நினைச்சது நடக்கும். வெள்ளெருக்கை வேரில் செஞ்ச வினாயகரை வீட்டில் வச்சு 48 நாட்கள் குறிப்பிட்ட மந்திரம் சொல்லி கும்பிட்டால் சகல காரியமும் சித்தியாகும். தூங்கி எந்திரிச்சதும் எருக்கஞ்செடியை பார்க்குறது நல்லதில்ல. ஆனா, வெள்ளெருக்கஞ்செடியை பார்த்தா தப்பில்லன்னு ஐதீகம். இதை வீட்டிலும் வளர்க்கலாம்.    

வாஷிங் மெஷின் ரிப்பேர் ஆகிடுச்சு. சர்வீசுக்கு ஆளை வரச்சொன்னேனே சொன்னீங்களா?!ம்க்கும் உனக்கு இதே பொழப்பா போச்சு. இருக்குற மெஷின்லயே அதிகம் கஷ்டம் கொடுக்காதது வாஷிங்க் மெஷின்னு எல்லாருக்கும் தெரியும். அதுவே உன்கிட்ட மாட்டிக்கிட்டு சீரழியுது என்னை மாதிரி... ஃப்ரிட்ஜ், மிக்சி, மாதிரி வாஷிங் மெஷின் அதிகமாக கரெண்டை இழுக்காது. வாஷிங் மெஷின்ல துணிகளை போடும்போது துணிக்கேத்த மாதிரி தண்ணி லெவலை செட் செய்யனும். கொஞ்சம் துணிகளுக்கு அதிக தண்ணியும், அதிக துணிகளுக்கு கொஞ்ச தண்ணியும் மெஷினை திணற வைக்கும்.  வாஷிங்க் மெஷின் கொள்ளளவுக்கு மேல துணிகளை போடக்கூடாது.  மாசத்துக்கு ஒருமுறையாவது டப் கிளீன் பண்ணனும். சாதாரண சோப் பவுடருக்கு பதில் சோப் லிக்விட் யூஸ் பண்ணா நல்லது. வாஷிங்மெஷின்ல இருக்கும் வாட்டர் பில்டர் வேலை செய்யுதான்னு பார்த்துக்கனும். இல்லாட்டி தண்ணில இருக்கும் மண்லாம் மெஷின்ல போய் அடைச்சுக்கும். துணி துவைச்சு முடிச்ச பின் காட்டன் துணியால துடைச்சு மூடி வைக்கனும்.  நைந்து போன துணிகளை போடக்கூடாது. ஏன்னா பஞ்சுத்துகள்லாம் டப்புக்குள் போய் அடைச்சுக்கும். அதிக நுரை வரும் பவுடரை யூஸ் பண்ணக்கூடாது.  பெட்ஷீட்டோடு மத்த துணிகளை போடக்கூடாது. வாஷிங்மெஷின்ல துணிகளுக்கு போடுற நீலத்தை போடக்கூடாது... இப்படிலாம் பார்த்துக்கிட்டா மெஷினும் நல்லா இருக்கும். 

இப்ப மெஷினை ரிப்பேர் செஞ்சுக்கொடுங்க. இனி ரிப்பேராகாம பார்த்துக்குறேன். போலீசுக்கு பதில் சொல்லி மாளாத ஒரு ஆளோட புத்திசாலித்தனத்தை பார்த்து சிரிச்சி யோசிச்சுட்டு, என் கேள்விக்கு பதில் யோசிச்சு வைங்க காஃபி போட்டு கொண்டாறேன்.


சிவப்பு மாளிகை இடப் பக்கத்திலும் நீல மாளிகை வலப் பக்கத்திலும் கருப்பு மாளிகை முன் பக்கத்திலும் இருப்பின் வெள்ளை மாளிகை எங்கிருக்கும்?

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466655

நன்றியுடன்
 ராஜி.

சனி, ஜூலை 15, 2017

காமாட்சி கிங்மேக்கரான கதை....

நடிப்பு, இசை, கல்வி, நாடகம், தற்காப்புக்கலை.....ன்னு எந்தத்துறையில சாதிக்கனும்ன்னாலும் அது சம்பந்தப்பட்ட ஆளுங்கக்கிட்ட  கத்துக்குறோம். ஆனா, அரசியல் செய்ய வரும்போது மட்டும் யார்க்கிட்டயும் கத்துக்கமாட்டேங்குறோம். அரசியல்வாதி ஆகி மாட்டிக்காம எப்படி சம்பாதிக்கலாம்/?! எங்க வருமானம் வரும்ன்னு கத்துக்குறாங்களே தவிர, நல்லபடியா அரசியல் செய்ய யாருக் கத்துக்குறதில்ல.  அப்படி அரசியல் செய்ய கத்துக்கனும்ன்னா யார்க்கிட்ட கத்துக்கனும் தெரியுமா?! எல்லா தலைவர்கள்கிட்டயும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கும். ஆனா, எல்லா ஸ்பெஷலும் சேர்ந்த ஒரு அரசியல்வாதி இருந்தார்ன்னா நம்பமாட்டீங்க. அப்படி ஒரு ஸ்பெஷலான அரசியல்வாதி நம்ம தமிழ்மண்ணுல இருந்தார்ன்னு சொன்னா இன்னும் ஆச்சர்யப்படுவீங்க.  அட, நிஜமாதாங்க சொல்றேன். சொன்னா நம்புங்க ப்ளீஸ்....  இன்னிக்கு யார்யாருக்கோ கல்வி வள்ளல்ன்னு பட்டம் கொடுக்குறாங்க. ஆனா அந்த பட்டத்துக்கு உரிய ஒரே ஆள் இவர்தானுங்க.. இப்ப நம்ப ஆரம்பிச்சு இருப்பீங்களே! இந்திய அரசியலையே ஆட்டி வைக்கும் நிலையில் ஒரு பச்சை தமிழன் இருந்தார்..., எளிமையின் சின்னம், படிக்காத மேதை, கர்மவீரர், கிங்மேக்கர்..... இப்பவாவாது நான் சொன்னதை நம்புறீங்களா?!  எந்த கட்சியா இருந்தாலும் தான் சார்ந்த கட்சித்தலைவர் ஆட்சிக்காலத்தை சொல்லாம இவர் ஆட்சிப்புரிந்த காலத்தை சொல்லி அவரை மாதிரி நாங்களும் ஆட்சி அமைப்போம்ன்னு சொல்லித்தான் இன்னிக்கும் ஓட்டு கேட்குறாங்கன்னா அவர் ஆட்சி எப்பேற்பட்டதா இருக்கும்?! இப்பவாவது நான் யாரைச்சொல்லுறேன்னு புரியுதுங்களா?! எஸ்.. அவரேதான்...  நான் சொல்லுறது நம்ம  காமராஜர் ஐயாவைத்தான்.காமராஜர் ஐயாவோட  பிறந்த நாள் இன்று. அவரைப்பற்றி நமக்கு தெரிந்ததும், தெரியாததுமாய் சில தகவல்கள் இன்று பார்க்கலாம்.

இன்னிக்கு விருதுநகர்ன்னு சொல்லப்படுற விருதுப்பட்டில  1903 வது வருடம், ஜூலை 15ம் நாள் குமாரசாமி, சிவகாமி அம்மாவுக்கும்  மகனாக வியாபாரக்குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை தேங்காய் வியாபாரம் செய்து வந்தார்.  சிவகாமி அம்மாளுக்கு  மூத்தவர்கள் இருவர் சகோதரர்கள். மூத்த சகோதரர் கருப்பையா. இவர் துணிக்கடை வைத்திருந்தார்.  இளைய சகோதரர் காசிநாராயணன். இவர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்திருந்தார்.  தங்கள் குலத்தெய்வமான காமாட்சியம்மாளின் பெயர்தான் காமராஜருக்கு முதன்முதலில் சூட்டிய பெயராகும்.  அவரது தாயார் ராஜா என அன்பாய் அழைப்பார். காமாட்சி+ராஜா=காமராஜர் என்றானது.  காமராஜருக்கு பின் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு நாகம்மா என்ற பேர் சூட்டினர். தங்கைமீது கொள்ளைப்பாசம் காமராஜருக்கு...தனது பள்ளிப்பருவத்திலேயே விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்கு போனார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுக்கொண்டிருந்த காலம்.  இளம் வயதில் பொதுக்கூட்டங்களில் கேட்ட எழுச்சி உரைகளே பிற்காலத்தில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட காரணமானது.  தந்தையோடு கல்விப்போம்.... என்ற முதுமொழிக்கேற்ப தனது  ஆறாவது வயதில் தந்தை குமாரசாமியின் மறைவுக்கு பின் காமாராஜரின் பள்ளிப்படிப்பு அஸ்தமித்தது. தாயின் நகைகளை விற்று சிலகாலம் பிழைப்பு ஓடியது.   தனது இரு மாமன் கடைகளிலும் மாறிமாறி சிலகாலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். ஆனாலும், அவர் கவனம் முழுக்க சுதந்திரபோராட்டத்திலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்திலும், உப்பு சத்தியாக்கிரகத்திலும் பங்கு பெற்றார்.சத்தியமூர்த்தியின் தொண்டனாகி, கங்கிரஸ் பேரியக்கத்தின் உறுப்ப்பினராகி  முழுநேரமும் தேசப்பணியாற்ற தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.   கள்ளுக்கடை மறியல், அந்நிய நாட்டு துணி எரிப்பு,  உப்பு சத்தியாகிரகம், கொடிப்போராட்டம்.. என அத்தனையிலும் பங்கேற்று சிறைச்சென்று தண்டனை அனுபவித்தார்.  தமிழ்நாட்டு காங்கிரசில் காமராஜருக்கென்று தனி இடம் உண்டானது.  1952 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றியும் பெற்றார்.  சுமார் 12 ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து அகில இந்திய அரசியலில் தமிழகத்துக்கென பெரும் செல்வாக்கை ஏற்படுத்தி தந்தார்.முதலைமைச்சரான கதை...

1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்புக் குறைந்தது. இதனால், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். 
கல்விக்கண் திறத்தல்....

காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார். மேலும், 17000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது எனலாம். இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.


தொழில்துறையின் வளர்ச்சிக்காக காமராஜர் மேற்கொண்ட திட்டங்கள்:
காமராஜர் கல்வித் துறையில் மட்டுமல்லாமல், தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். தமிழகத்தில் தொழில் துறைகளை வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கினார். ‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன. இதைத் தவிர, ‘மேட்டூர் கால்வாய்த்திட்டம்’, ‘பவானி திட்டம்’, ‘காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்’, ‘மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார். காமராஜர் ஆட்சியின் இறுதியில், தமிழகம் தொழில் வளத்தில் வடநாட்டு மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
கிங்க் மேக்கர்...
மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராஜர் அவர்கள், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதி “கே-ப்ளான்  (K-PLAN)” எனப்படும் “காமராஜர் திட்டத்தினை” கொண்டுவந்தார். அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். அதன் பேரில் அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராஜர் பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, தில்லிக்குச் சென்றார். பிறகு, அதே ஆண்டில் அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இத்திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்சி தேசாய் செகசீகன்ராம், எசு.கே. பட்டேல் போன்றோர் பதவியைத் துறந்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், கட்சியினரிடமும், தொண்டர்களிடமும், மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாறி, அனைவருக்கும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். 1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966 ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார் காமராஜர். 

பொற்காலத்தின் முடிவு...
தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்பணித்துக்கொண்ட காமராஜர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே.
காமராஜரை பற்றி சுவாரசியமான தகவல்கள்...
1. ஆரம்ப பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத காமராஜர் சரளமாய் ஆங்கிலம் பேசுவார். 
2. காமராஜருக்கு நினைவாற்றல் அதிகம். ஒருவரை சந்தித்து எத்தனை வருடம் கழித்து சந்திக்கும்போதும் மிகச்சரியாய் அடையாளம் கண்டுக்கொள்வார். 
3. வெளிப்பயணங்கள், கூட்டங்களின்போது அனைவரும் சாப்பிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டப்பிறகே உணவருந்துவார்.  காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும்அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டுவிட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக்கொள்வார்.
4. எந்த இடத்தில் பேசுகிறாரோ அந்த ஊரின் சிறப்புகள், அந்த ஊரில் பிறந்த தியாகிகளை பற்றி தெரிந்துக்கொண்டு பேசுவதை வழக்காமாய் கொண்டிருந்தார். அதனால், தமிழகத்தின் மூலை முடுக்கின் வரலாறு காமராஜருக்கு அத்துப்படி. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடித்தடம் படாதகிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார்.இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்குஅத்துப்படியாக இருந்தது. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில்என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார்.பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினைபற்றி மக்களுடன் விவாதிப்பார்.
5. தனது ஆட்சிக்காலத்தில் உயர்கல்விக்காக ரூ. 175 கோடி செலவழித்தார். அந்தக்காலத்தில் இதுமிகப்பெரிய தொகையாகும். 
6. காமராஜரின் பாட்டியின் இறுதி சடங்கின்போது காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்றிலிருந்து தோளில் துண்டு அணிவதை வழக்கமாக்கி கொண்டார். 
7. காமராஜருக்கு பூக்களால் ஆன மாலைகள் என்றாலே அலர்ஜி. அதனால் கழுத்தில் அணுவிக்கும் முன் கைகளில் மாலைகளை வாங்கிக்கொள்வார். அதனால், மாலைகளுக்கு பதிலாக கதர் துண்டுகளை பரிசளித்தார் மகிழ்ச்சி கொள்வார். ஏனெனில், கதர் துண்டுகளை பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுப்பதை வழக்கமாய் கொண்டிருந்தார்.  
8.  எல்லாரும் காமராஜர் என்று அழைத்துவந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும்"காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார். அதேப்போல காமராசருக்கு   "பச்சைத்தமிழன்'' என்ற பெயரைசூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.
9. காமராசருக்கு ராமர்ன்னா கொள்ளைப்பிரியம். ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பார். 
10. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர்சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றிஇருக்கிறார். அந்தளவுக்கு யாரும் கேள்வி எழுப்பாவண்ணம் ஆட்சிப்புரிந்தார். 
11. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நலதிட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை."மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள்இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.
12. எனக்கு தெரிந்து இவரின் சட்டைப்பையில் பணம் வைத்திருந்ததில்லைன்னு நேரு புகழுமளவிற்கு காமராஜர் மணிபர்சோ பேனாவோ ஒரு போதும் வைத்துக்கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்துபோட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம்பேனா வாங்கி கையெழுத்திடுவார். மதிய உணவின்போது குறிப்பிட்ட பீங்கான் தட்டில் சாப்பிடுவதை வழக்கமாகி கொண்டிருந்தார்.  கடைசிக்காலம் வரை அத்தட்டிலேதான் சாப்பிட்டு வந்தார்.  
13. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகுளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால்மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையேபோட்டுக் கொள்வார்.
14. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி'என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால்`கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.
15. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தைமுதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமைகாமராஜரையே சேரும்.
16. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம்இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டுவிட்டார்.
17. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றிஉலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும்,ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசுவிருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள்விடுத்தன. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்கு சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி,செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். 

18. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும்காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள்முழுவதும் இருந்தார்கள்.


19.  1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழைமாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்துவைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

20. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார். காமராஜர் ரஷியப் பயணத்தின்போது மாஸ்கோ வரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகாவென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்ற பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப்பெற்றார்.

21. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி,குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.

22. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்விமுதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.

23. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.

24.. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களைகொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப்போவதுமில்லை.

25. . காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒருபொறியல் அல்லது கீரை இவ்வளவுதான்சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில்ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால்விரும்பி சாப்பிடுவார்

26. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும்எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொருவேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்'என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.

27. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்குகொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்புடிரங்குப் பெட்டிதான்.

28.. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ்.சீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர்`மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' என அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார்.

29. . 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின்உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில்காமராஜரும் கலந்து கொண்டார்.

30. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படிபேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும்கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார். ஒருவேளை எதாவது கோவத்தில் திட்டிவிட்டாலும் ஈகோ பாராமல் தானே வந்து பேசுவார். 

31.  1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல்நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவர்.

32. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலுநாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகியமூவரும்தான். முதலமைச்சராய் பதவி ஏற்றதும் சத்தியமூர்த்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தபிந்தான் சட்டசபைக்கே சென்றார். 

33.  பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம்சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.

34. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள்அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதைசெயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம்திரும்பி பார்க்க வைத்தார்.

35.  கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும்மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப்பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான்ஏற்படுத்தப்பட்டது.

36. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும்பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.

37. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொருபெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள்திறந்து வைத்து சாதனை படைத்தார்.

38. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில், செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும்தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.

39. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே இரங்கல் செய்தி ஒன்றை பிரதமர் இந்திராகாந்திக்கு அனுப்பிவைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும்,தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.

40. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில்இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமேமுதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.

41. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ்மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சிகாலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

42. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான்.  காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்டபோது...  கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கியசெயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது... ....நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது....


43. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காகஎதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும்நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப்பேசுவார்.


44. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம்ஆண்டுநினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால்தலையைவெளியிட்டது.


45. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காமராஜரின் திருவுருவப்படம்அப்போதைய குடியரசுதலைவர் என்.சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.

46,  தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால்,`கொஞ்ச.ம்நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்துஇழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்காஇந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார். 

47 மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார்வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார்.என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப்பொறுத்தவரை மாயா பஜார் விருந்து.

48.  சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்புகொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக்கொடுங்க' என்று வாங்க மறுப்பார்.

49. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்கமுடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில்சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.  ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே பிடிக்காது. தான் செல்லும் காரில் சைரன் இருந்தாலும் , இன்னும் உயிரோடத்தானே இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்கன்னு கிண்டல் செய்வார். 

50. இரவு எத்தனை மணிக்கு படுக்க சென்றாலும் காலை ஏழு மணிக்குள் விழிப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தார். எல்லாவற்றிலும் சிக்கனம் பார்க்கும் காமராசர் பேசுவதிலும் மிகச்சிக்கனம் பார்ப்பார். ஆகட்டும் பார்க்கலாம்ன்னு சொன்னால் அக்காரியம் முடிந்தமாதிரிதான்.  முடியாதென்றால் முகத்திற்கெதிராய் சொல்லிவிடுவார்... 

சிறந்த ஆட்சியாளராய் திகழ்ந்தார் நம் காமராசர்.  இதுமாதிரியான இன்னொரு அரசியல்வாதியை இப்பூமி பார்க்குமா?!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466449
நன்றியுடன்,
ராஜி.


புதன், ஜூலை 12, 2017

அர்ஜுனன் தன் மகனால் கொல்லப்பட காரணம் - தெரிந்த கதை தெரியாத உண்மை பாகம் 2

அர்ஜுனன் தன் மகனால்தான் கொல்லப்பட்டான்ன்ற நம்பமுடியாத தகவலோடும், அந்த நிகழ்ச்சி நடக்க மூலக்காரணமான   அர்ஜுனன் மணிப்பூர் ராஜ்யத்தினுள் அஸ்வமேத யாக குதிரையுடன் நுழைவது பற்றி கடந்த தெரிந்த கதை தெரியாத உண்மை தொடரில்  பார்த்தோம். பார்க்கத்தவங்க இங்கே போய் பார்த்திட்டு வந்துடுங்க. 


மணிப்பூரை ஆண்டு கொண்டிருந்த மன்னனின் பெயர் பாப்புருவாகனன். இவன் மணிப்பூர் இளவரசி சித்திராங்கதைக்கும், அர்ஜுனனுக்கும் பிறந்த மகன்.  அர்ஜுனனுடைய வருகையை கேள்விப்பட்ட பாப்புருவாகனன், நகரத்தின் எல்லையில் தனது தந்தையான அர்ஜுனனை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளை செய்தான். ஆனால், அவற்றை ஏற்க அர்ஜுனன் மறுத்துவிட்டான். மேலும் அவன், பாப்புருவாகனனுக்கு சவால் விட்டான். ஏ! பாப்புருவாகானா! நீ என் மகன். ஒரு நாட்டு எல்லைக்குள் அஸ்வமேத யாக குதிரை நுழைகிறதென்றால்  சத்திரிய தர்மப்படி அதை எதிர்க்கவேண்டும்.  நீ ஒரு பெரிய வீரன். முடிந்தால் இந்த யாக குதிரையை கட்டிப்போட்டு ,அது உன் ராஜ்ஜியத்தினுள் தங்கு தடையின்றி செல்வதை தடுத்து நிறுத்த முயற்சி செய்.  அதைவிட்டு கோழைகளை போல எதிரிகளை வரவேற்பது சத்திரிய தர்மம் அல்ல.  அப்படி செய்பவன் ஒரு நாளும் ஒரு நல்ல அரசனாக இருக்கமுடியாது. உனக்கு திறமை இருந்தால் என்னுடன் போருக்கு வந்து இந்த குதிரையை அடக்கு என பாப்புருவாகனனை போருக்கு அழைத்தான் .

மனம் தளர்ந்த பாப்புருவாகனன், அர்ஜுனன் பாரதப்போரில் தன் உறவுகளை எல்லாம் கொன்று தீர்த்தானே! அதுப்போல் ஒரு தந்தையுடன் போர் செய்வதா?! என மனசோர்வுற்று, அர்ஜுனனை வரவேற்க வந்த வழியோடு திரும்பினான். இங்கேதான் திடீர் திருப்பமாக உலூபி வருகிறாள். யாரிந்த உலூபின்னு பார்த்தோம்னா  அர்ஜுனனின் பல மனைவியரில் இந்த உலூபியும் ஒருவள். அர்ஜுனன்  12 ஆண்டு தீர்த்த யாத்திரையின் போது, கங்கை ஆற்றில் குளிக்கும் போது, நாகக்குலத்தில் பிறந்த  இடுப்பிற்கு மேல் மனித உடலும்; இடுப்பிற்கு கீழ் பாம்பு உடலும் கொண்ட நாகக்கன்னிகைதான் இந்த உலூபி. அர்ஜுனனை பார்க்கிறாள். இவளின் தந்தை நாகர்களின் அரசனாவார். இவர்கள் கங்கை  ஆற்றில் வாழ்ந்து வந்தார்கள்  உலூபி போர்க்கலையில் தேர்ந்தவள். அவள்மீது அர்ஜுனன்  மோகம் கொண்டு அவளோடு நாகலோகம் சென்று அங்கு, அவளை திருமணம் செய்துக்கொண்ட அர்ஜுனனுக்கு அரவான் என்னும் மகன் பிறக்கிறான். அதன் பின்னர்தான் அர்ஜுனனுக்கு மணிப்பூர்  இளவரசியுடன் திருமணம் நடந்த விசயம் கேள்விப்பட்டு சித்ராங்கதையின் மனவாட்டத்தை உலூபி புரிந்துக்கொண்டு சித்ராங்கதை இருக்கும் இடத்திற்கு அர்ஜுனனோடு செல்கிறாள்.

அதிலிருந்து சித்திராங்கதையின் மகன் பாப்புருவாகனின் வளர்ச்சியில் உலூபி பெரும்பாங்காற்றினாள்.  அர்ஜுனனுக்கும், பாப்புருவாகனனுக்கும்  நடந்த உரையாடலை கேள்விப்பட்ட உலூபி அர்ஜுனனுடன் பாப்புருவாகனனை  போர் புரிய உத்தரவிட்டாள். அப்படி உலூபி உத்தரவிட காரணம் உண்டு.   பீஷ்மர் குருஷேத்திர போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டதால் பீஷ்மரது சகோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்திலிருந்து அர்ஜுனனை காப்பாற்றவே தந்தையையும், மகனையும் மோத சொன்னாள்.  நேராக பாப்புருவாகனனிடம் சென்ற உலூபி, மகனே! நான் உன் அம்மா. நீ சாதாரணமானவனில்லை. மகனே! உன் தந்தை பெரிய போர்வீரன். அவருடைய மகன் நீ. நீ ஏன் போர்க்களத்திலிருந்து கோழையை போல் பின்வாங்குகிறாய். அது உன் சத்திரிய குலத்துக்கே பெரிய இழுக்கு. செல்ல மகனே! நீ போய் அந்த அஸ்வதமேக யாகக்குதிரையினை பிடித்து, கட்டி இழுத்து வந்து, உன் தந்தையுடன் போரிட்டு அவரை வெற்றிக்கொள் எனக்கூறினாள். 
Mahabharatham - The Great Indian Epic...
பாப்புருவாகனன்,  உலூபியின் வார்த்தைகளால் உற்சாகமடைந்தான். தாயே! நீங்கள் சொல்வது மிகச்சரி  போர்க்களத்தில் எதிரி யாராக இருந்தாலும் எதிர்த்து போரிடுவதுதான் ஒரு சத்திரியனுக்கு அழகு. ஆனால், சொந்த தந்தையுடன் போரிடுவதுதான் கொஞ்சம் சங்கடமாக இருக்கின்றது. அதனால்தான், நான் அவரிடம் சண்டையிட விருப்பம் இல்லாமல் திரும்பினேன். அதே இடத்தில் வேறு யாராக இருந்தாலும் என்னுடைய அம்பிற்கு பதில் சொல்லாமல் விட்டிருக்க மாட்டேன் தாயே எனக்கூறினான். எப்படி இருந்தாலும் .என் தந்தையுடன் போர் புரிய தாயாகிய நீங்கள் அனுமதித்தாருங்கள். வேறு யாருடைய நீதிபோதனையும், அனுமதியும் எனக்கு தேவை இல்லை என வீராவேசமாக கூறினான்.   பாப்புருவாகனன் என் தாய் என்னை சண்டையிட சொல்கிறார். என் தந்தை என்னை சண்டையிட அழைக்கிறார், என் பெற்றோர்களின் இந்த வேண்டுக்கோளை நான் ஏற்கிறேன் என்று உலூபிக்கு மரியாதையை செலுத்திவிட்டு அர்ஜுனனின் படைகள் இருந்த இடத்தை நோக்கி முன்னேறினான்  பாப்புருவாகனன்.
Mahabharatham - The Great Indian Epic...
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் , பாப்புருவாகனன் அஸ்வமேத யாகக்குதிரையை பிடித்துக் கட்டினான். பிறகு, அர்ஜுனனுக்கு சவால்  விடும் வண்ணம் அவனை நோக்கி ஆவேசமாக முன்னேறினான். அர்ஜுனன்மீது அம்புமழையாய் பெய்வித்தான். அம்புகள் புறப்பட்டு அர்ஜுனனை நோக்கி சென்றன. அர்ஜுனன் தன்னை நோக்கி வந்த அத்தனை  அம்புகளையும் நடுவழியில் தடுத்து நிறுத்தி தாக்கி இரண்டாக உடைத்தான். ஆனாலும் பாப்புருவாகனன் சளைக்காமல் அம்புகளை ஏவிக்கொண்டு இருந்தான். ஒருக்கட்டத்தில் அர்ஜுனனால் அவைகளை சமாளிக்கமுடியாமல் திணறினாலும், தன்னுடைய மகனின் வில்வித்தையை கண்டு பெருமிதம் கொண்டான். இருந்தாலும் அர்ஜுனன் அவனுடைய திறமையை நிலைநாட்டும் பொருட்டு பாப்புருவாகனின் தேரில் இருந்த கொடியை தனக்கு சிவபரம்பொருள் கொடுத்த காண்டீபம் என்னும் வில்லின் உதவியுடன் அந்த தேர் கொடியினை உடைத்தான்.
பாப்புருவாகன னும் சளைக்காமல் போரிட்டான்.ஒருக்கட்டத்தில் அர்ஜுனன் தன்னுடைய மகனின் வில்வித்தையை கண்டு பொறாமைப்பட்டான். அதனால் எழுந்த பெருங்கோபத்தால் பாப்புருவாகன்மேல் மேலும்மேலும் அம்புகளை தொடுத்தான். இதனால் கோபமுற்ற  பாப்புருவாகன், அர்ஜுனனின் மார்பை நோக்கி குறிபார்த்து ஒரு அம்பை எய்தான். அந்த அம்பு அர்ஜுனனின் மார்பை துளைத்தது. அர்ஜுனன் தன்னுடைய வில்லோடு கீழே  நிலத்தில்   விழுந்தான். இதேப்போல், பாப்புருவாகனும் கீழே விழுந்தான். ஏனெனில், அர்ஜுனன் விட்ட அம்புகள் அவனுடைய உடலில் அவ்வளவு காயங்களை ஏற்படுத்தி இருந்தது. இருவரும் சுயநினைவுற்று கிடந்தனர்.  பாரதப்போரில் மிகப்பெரிய ஜாம்பவான்களை வீழ்த்திய மிகப்பெரிய வீரனான அர்ஜுனன்  தன் சொந்த மகனால் மார்பு துளைக்கப்பட்டு  எழமுடியாமல் இங்கே மண்ணில் வீழ்ந்து கிடந்தான். தந்தைக்கும், மகனுக்கும் இடையில் ஏற்பட்ட போரில் இரண்டுபேரும் வீழ்ந்து மரணத்தருவாயில் இருப்பதை தன்னுடைய ஞானத்தால் அறிந்த உலூபி உடனே அவ்விடம் விரைந்தாள். இதைக்கேள்விப்பட்ட சித்ராங்கதையும் அங்கே ஓடோடி வந்தாள்.
இரண்டுபேரும் காயமுற்று மண்ணில் வீழ்ந்து கிடப்பதை கண்ட சித்ராங்கதை,  உலூபியிடம் சென்று அவள் கையை பிடித்து , உலூபி வீழ்ந்து கிடக்கும் இருவரையும் பார். தன்  தந்தையுடன் போரிடமாட்டேன் என திரும்பிய பாப்புருவாகனனை போருக்கு தூண்டியவள் நீதானே!இப்பொழுது இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்களே!நீ எல்லாம் ஒரு  பணிவான மனைவியா?!  தன் கணவனையே கொல்ல, தன் மகனயே  தூண்டி இருக்கிறாயே! உனக்கு நீதி, நியாயம் என்னவென்று தெரியுமா?! ,மிகப்பெரிய போர்வீரனுடன் அதுவும் சொந்த தந்தையுடன் ஏதுமறியாத இந்த இளைஞனை போரிட தூண்டியது எந்த விதத்தில் தர்மமாகும்?!அவனால் அர்ஜுனனை எதிர்த்து போராடமுடியுமா?!,இதில் யாருக்காவது ஏதாவது ஆனால் அதன் முழு பொறுப்பும் நீதான் ஏற்கவேண்டும். உலூபி நீதான் உனது சக்தியால் அவர்களை காப்பாற்றவேண்டும். அதேபோல் அர்ஜுனனை மீண்டும் உயிர்பிப்பதும் உனது கடமையாகும் என  உலூபியை பார்த்து கோபமுடன் பேசினாள் சித்ராங்கதை.
Mahabharatham - The Great Indian Epic...
சித்ராங்கதை வீழ்ந்து கிடக்கும் அர்ஜுனனின் கைகளை பிடித்துக்கொண்டு அழுது புலம்பினாள். அர்ஜுனா! நீங்கள் எவ்வளவு பெரிய போர்வீரர். போரில் எதிரிகளை விரட்டியடித்து நாட்டு மக்களையெல்லாம் காப்பாற்றினீரே! உங்கள் உயிரை உங்களால் காப்பாற்ற முடியாமல் வீழ்ந்து கிடக்கின்றீரே! பலவருட இடைவெளிக்குபின் இப்பொழுதுதான் உம்மை பார்க்கிறேன். அதுவும் இந்த நிலையிலா பார்க்கவேண்டும்?! எழுந்திருங்கள். உங்கள் யாககுதிரையை காப்பாற்றுங்கள். கண்ணை திறவுங்கள்.... யாகக்குதிரையை வழிநடத்துங்கள் என பலவாறாக அர்ஜுனனின் கையைப்பிடித்து அழுதுகொண்டிருந்த சித்ராங்கதை. அர்ஜுனன் இறந்துவிட்டான் என்பதை சித்ராங்கதை உணர்ந்துக்கொண்டாள். இனி அந்த மாபெரும் போர்வீரன் திரும்ப வருவானா?! என எண்ணி ,வேகமாக உலூபியிடம் சென்றாள். அவள் கையைப்பிடித்த சித்ராங்கதை நம் இருவருக்கும் அவர்தான் கணவன். அதுவும் அவருடைய சொந்தமகனான என் பிள்ளையை கொண்டே அவரை கொல்ல செய்தாய். நீதான் இதற்கு காரணம், நீதான் அவருடைய உயிரை திரும்ப கொண்டுவரவேண்டும் என உலூபியின் கைகளை பிடித்துக்கொண்டு அழுதாள் சித்ராங்கதை 
Mahabharatham - the great Indian epic...
உலூபியின் கைகளை பிடித்துக்கொண்டு அழுதாள் சித்ராங்கதை. இந்த சமயத்தில் பாப்புருவாகனனுக்கு மெல்ல நினைவு திரும்பியது. அங்கே தன்னுடைய தாய் சித்ராங்கதை அழுது புலம்புவதை பார்த்தான். அவளை பார்த்து, தாயே! எதற்கும் கலங்காத  தாங்கள் இன்று மிகவும் வருந்தி அழுவதை என்வாழ்நாளில் இதுவரை பார்த்ததே இல்லையே. நான் மிகப்பெரிய பாவி ஆகிவிட்டேனம்மா. என் சொந்த தந்தையை என் கைகளாலேயே கொன்றுவிட்டேனே! நான் செய்த இந்த பாவத்திற்கு பரிகாரமே இல்லையம்மா என் அழுது புலம்பினான்.  பின்னர் பாப்புருவாகனன், உலூபியிடம் ,தாயே நீங்கள் சொன்னதைக்கேட்டு தான் என் தந்தையுடன் போர் புரிந்தேன். இப்பொழுது அவர் இறந்து விட்டார் .  இப்பொழுது உங்களுக்கு  திருப்திதானே?! தந்தையை கொன்ற பழிபாவமும், மனஅழுத்தமும் என் வாழ்நாள் முழுவதும் தொடருமே! என்னுடைய மரணத்திற்கு அப்பால் கூட தந்தையை கொன்ற பாவத்திற்காக கொடிய நரகம்தான் எனக்கு கிடைக்கும் என பலவாறு அழுது புலம்பினான் பாப்புருவாகனன் .


அழுது புலம்பிய பாப்புருவாகனன் உடனே ஒரு முடிவெடுத்தான்.  தந்தை இல்லாமல் நான் இந்த உலகில் உயிர் வாழமாட்டேன்.  பெற்ற தந்தையை கொன்றேன் என்ற பழிச்சொல்லோடு, நான்  பிராயசித்தம் செய்யப்போறேன் எனக்கூறி வேகமாக எழுந்தான்.  அதுவரை இறுக்கமாகவே இருந்த உலூபிபாப்புருவாகனனையும், சித்ராங்கதையையையும் பார்த்து மெல்ல சிரித்தாள். பின் கண்களை மூடிவிட்டு ஒரு மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தாள். அப்பொழுது .ஒரு ஒளிவீசும் வைரக்கல் அவளுடைய கைகளில் தோன்றியது.   என் மகனே பாப்புருவாகனா! உனக்கு என்ன புத்தி பேதலித்து போய்விட்டதா?! அர்ஜுனன் யார் ?அவர் இந்திரனுடைய மகன் அவர் எப்படி இறப்பார்?! அவர் ஒரு பெரிய போர்வீரர். அவருடைய மகனான உனக்கும் அதே உற்சாகமும், தைரியமும் இருக்கிறதா என சோதித்து பார்க்கவே, உன் தந்தையுடன் நீ போரிடுமாறு உன்னை தூண்டினேன். நீ அவருடைய மகன் என்று நிரூபித்துவிட்டாய், உன் தந்தை இப்பொழுது ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுவதைப்போல்,இந்த வைரக்கல்லின் உதவியால் எழுவார். மகனே பாப்புருவாகனா! இந்த வைரக்கல்லை உன் தகப்பனின் இதயத்தில் வை. அது மீண்டும் துடிக்க ஆரம்பிக்குமென அந்த வைரக்கல்லை பாப்புருவாகனனிடம் கொடுத்தாள் . அவனும் அவ்வாறே செய்தான். அப்பொழுது உறக்கத்தில் இருந்து எழுவதைப்போல், அர்ஜுனன் உயிர்ப்பித்து எழுந்தான். உடனே,  தன்மகனை ஆர தழுவிக்கொண்டு அவனுடைய வீரத்தை பாராட்டினான். 
262df96bfaea3ab0a3618373db78410d.jpg (736×565)

தன் தந்தையை வணங்கிநின்ற  பாப்புருவாகனனிடம், அர்ஜுனன் ஏன் உன் முகத்தில் துக்கமும், சந்தோஷமும் காணப்படுகின்றது என கூறி, அங்கே சுற்றிப்பார்த்த அர்ஜுனன்  தன் அருகில் தன் மனைவியராக சித்ராங்கதையும், உலூபியையும் கண்டு ஆச்சரியப்பட்டான். உலுபியிடம் என்ன  நடந்தது,  நீ எப்படி பாதாள லோகத்திலிருந்து வந்தாய் எனக்கேட்டு அங்கு நடந்தது எதுவும் தெரியாமல் எல்லோரையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு நின்றான். உலூபி மெதுவாக பேச ஆரம்பித்தாள். என் பிரியமானவரே!இங்கே யாரும் எவ்வித தவறும் செய்யவில்லை. உங்கள் சொந்த மகனையே உங்களுக்கு எதிராக போரிடவும் நான் தூண்டிவிடவில்லை. ஒரு சாபத்திலிருந்து உங்களுக்கு விமோசனம் செய்வதற்காகவே நான் இங்கே வரவேண்டியதாயிற்று. அதனாலேயே உங்கள் மகன் தன் கையால் உங்களை கொன்று உங்களுக்கு புது வாழ்வு அளித்திருக்கிறான் எனக்கூறி அர்ஜுனனுக்கிருந்த சாபத்தை விளக்கினாள்.
Krishna bhishma pitamah during Mahabharat war


குருஷேத்திர யுத்தம் நடைபெற்ற பத்தாவது  நாள். பயங்கர போர் முழக்கம் கௌரவ சேனைகள் மகரவியூகத்தை வகுத்தனர். பாண்டவசேனைகள் ராஜாளி வியூகத்தை வகுத்து எதிர்கொள்ள ஆரம்பித்தனர். இங்குதான் மாயக்கண்ணன் தன சூழ்ச்சியை ஆரம்பித்தான். அப்பொழுது பீமனுக்கும் பீஷ்மருக்கும் கடுமையான யுத்தம் நடைபெற்றது. எல்லோருக்கும் தெரியும் யாராலும் வெல்லமுடியாத பீஷ்மரின் முன்பு பீமன் தோற்று ஓடுவது உறுதியென.  அப்பொழுது அர்ஜுனன்,பீஷ்மரை தாக்க வந்தான் அப்பொழுது  மாயக்கண்ணன் சதி செய்து, சிகண்டியை முன் நிறுத்தி பீஷ்மரின்மேல் அம்புமழை பொழிய வைத்தான். அந்தச்சமயத்தில் அஷ்ட வசுக்கள் கங்கையில் குளிக்கும் நேரத்தில், உலூபியும் அங்கே நீராடினாள். அப்பொழுது அஷ்ட வசுக்கள் தங்கள் தாயான கங்கையிடம் ஒரு வேண்டுக்கோளை வைத்தனர். தாயே! பீஷ்மர் உங்களுடைய மகன், எங்களில் ஒருவன். அவரை சிகண்டியின் மூலம் நிராயுதபாணியாக்கி சூழ்ச்சி செய்து  அம்பெய்து மரணப்படுக்கையில் தள்ளிவிட்டனர். அர்ஜுனன்தான்  அம்பெய்தி எங்களது சகோதரனின் உடலை துளைத்துவிட்டான். அவன் பெற்ற வெற்றி சூழ்ச்சியினால் வந்தது. நிராயுதபாணியை தாக்குவது ஒரு சத்திரினுக்கு அழகல்ல. ஆகையால், கோழைபோல் எங்களது சகோதரனை  கொன்ற  அர்ஜுனனை சபிக்க விரும்புகிறோம். அதற்கு  உங்களது அனுமதியை பெறவந்திருக்கிறோம் என வணங்கி நின்றனர் அஷ்ட வசுக்கள் . கங்கையும் அவ்வாறே சம்மதிக்க, கடுமையாய் தங்களை சபித்தனர். ஆனால், சாபம் என்னவென்று அறிய முடியவில்லை. 
BHISHMA PITAMAH'S FALL AND REST ON ARROW BED...


அந்த சமயத்தில் அங்கே குளித்து கொண்டிருந்த நான் அதைக்கேட்டேன். உடனே,  என் தந்தையிடம் சென்று, என்ன சாபமெனவும், இதற்கு சாபவிமோசனம் என்னவென்று வசுக்களிடம் கேட்டு சொல்லுமாறு வேண்டி நின்றேன். என் தந்தையும் அஷ்ட வசுக்களிடம் எவ்வளவோ மன்றாடியும் சாபத்தை சொல்லவில்லை. ஆனால், சாபவிமோசனத்தினை மட்டும் சொன்னார்கள்.  அர்ஜுனன் தன்னுடைய சொந்தபந்தங்களையேல்லாம் போரில் கொன்று குவித்ததுபோல தன்னுடைய சொந்த மகனால் போரில் கொள்ளப்படும்போது அவனுடைய சாபம் நீங்கும் எனக்கூறினர் அஷ்டவசுக்கள். என்ன செய்வதென நான் யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் நீங்கள் அஸ்வமேத யாக குதிரையுடன், பாப்புருவாகனனிடம் போருக்கு தயாரானீர்கள் அந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டேன் .,
DIFFERENT NARCISSUS | Tengkuputeh
பாப்புருவாகனனால் கொல்லப்பட்டபோது உங்கள் சாபமும் விலகியது. என்னுடைய நாகமணியின் உதவியுடன் இறந்த உங்களை உயிர்ப்பித்தேன். இதுதான் நடந்தது என சொன்னாள் உலூபி. இதையெல்லாம் கேட்ட அர்ஜுனன் மிகவும் சந்தோஷமடைந்தான். தன் மனைவிகளான சித்ராங்கதையையையும், உலூபியையும் பார்த்த சந்தோஷத்துடன்,  தன் மகனையும் கண்ட சந்தோஷத்தில் அவர்களுடன் அரசவைக்கு சென்று தன்னுடைய அஸ்வமேதயாக குதிரையுடன் பயணத்தை தொடர்ந்தான்..............

அஷ்ட வசுக்கள்;

தரன், துருவன், சோமன், அபன், அநிலன், அக்கினி, பிரத்தியூஷன், பிரபாசன் என எட்டுப்பேர்கள். இந்த எட்டுப்பேருக்கும் அஷ்டவசுக்கள் என்று பொதுப்பெயர். வசிஷ்டர் ஒரு முனிவர். காட்டில் தவம் செய்து கொண்டிருக்கிறார். அங்கு அவர் ஒரு பசுவை வளர்க்கிறார். அது தெய்வப்பசு. பார்க்க மிக அழகாக இருக்கும். அந்தப் பசுவுக்குப் பெயர் "ஓமப்பசு".


அந்த எட்டு தேவதைகளான "அஷ்டவசுக்களும்"  மேல் உலகத்திலிருந்து பூமிக்கு வருகின்றன. இங்கு வந்து இந்த ஓமப் பசுவை பார்த்து அதிசயித்து அதன் மேல் ஆசை வைக்கின்றன. அதில், அந்த எட்டு வசுக்களில் ஒரு வசு மட்டும், சிறு குழந்தையைப்போல, எனக்கு அந்த பசு வேண்டும் என்று கேட்கிறது. அது இல்லாமல் மேல் உலகம் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. எனவே அவர்கள் எல்லோரும் சேர்ந்து அந்த பசுவைப் பிடித்துக் கொண்டு மேல் உலகம் சென்றுவிடுகின்றனர். 

முனிவர் வருகிறார். பார்க்க்கிறார். பசுவைக் காணோம். ஞானதிருஷ்டியில் பார்க்கிறார். பசு மேல் உலகத்தில் இருக்கிறது. திருடிக் கொண்டு சென்றுள்ளார்கள். கோபம் முனிவருக்கு. என் பசுமீது ஆசைப்பட்ட அந்த எட்டு வசுக்களும் இந்த மண் உலகில் பிறந்து கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்று சாபம். அந்த எட்டு வசுக்களுக்கும் இந்த சாபம் தெரிந்துவிட்டது. வந்து முனிவரிடம் மன்னிப்பு கேட்கின்றன. தண்டனை குறைக்கப் படுகிறது. எட்டு வசுக்களில் 7 வசுக்கள் இந்த பூமியில் பிறந்தவுடன் இறந்து மேல் உலகம் செல்லலாம். ஆனால், என் பசுமீது ஆசை கொண்ட அந்த எட்டாவது வசுமட்டும் இந்த மண் உலகில் பிறந்து மற்ற ஏழு வசுக்களின் காலத்தையும் கஷ்டத்தையும் சேர்த்து அனுபவிக்க வேண்டும் என்று தண்டனையை மாற்றி தீர்ப்பை எழுதிவிட்டார்.
கங்கை என்பவள் பெண். அவள் பாரத தேசத்தின் ராஜாவான சந்தனு மன்னனுக்கு மனைவியாகி இந்த எட்டு வசுக்களையும் பிள்ளைகளாக பெறுகிறாள். ஆனால், தன் கணவன் சந்தனு மன்னனிடம் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். அதன்படி அவளுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் என்ன செய்யப் போகிறாள் என்று கணவன் (மன்னர்) கேட்க கூடாதாம். அதன்படி, அவள், ஒவ்வொரு குழந்தையையும் பிறந்தவுடன் கங்கை ஆற்றில் தூக்கி எறிகிறாள். கணவனுக்கு கோபம் வந்து, எட்டாவது குழந்தை பிறக்கும்போது தடுக்கிறான். அவள் அந்த குழந்தையுடன் ஆற்றில் மறைகிறாள். அந்த குழந்தையை மட்டும் ஆற்றில் எறியாமல் வளர்த்து பெரியவன் ஆனதும் கணவனிடம் ஒப்படைக்கிறாள். அந்த மகன்தான் மகாபாரதக் கதையில் மிக முக்கியமானவரான பீஷ்மர். அந்த சாபத்தால் தான் பீஷ்மர் பல தலைமுறைகளுடன் வாழ்ந்து அல்லல்பட்டார். 

மீண்டும் இதுப்போன்ற சுவாரசியமான மற்றொரு கதையுடன் தெரிந்த கதை, தெரியாத உண்மை பகுதியில் சந்திப்போம்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466090
Native Indians Girl Art | ... art+native+american+girl.png#native%20american%20fantasy%20art
நன்றியுடன்,  
ராஜி 

செவ்வாய், ஜூலை 11, 2017

பூமியின் கற்பக விருட்சம் எது தெரியுமா?! கிச்சன் கார்னர் முருங்கைமரம் வைத்தவன் பசியோடு தூங்கமாட்டான்னு எங்க ஊர் பக்கம் சொல்வாங்க. ஏன்னா, சீசனில்லாத போதும் ஒன்னிரண்டு காய் காய்க்கும். காய் இல்லாதபோது முருங்கைகீரையை சமைச்சு சாப்பிடலாம். முருங்கை மரத்துக்கு கற்பகத்தருன்ற பேருமுண்டு.   முரின்னா ஒடிதல்ன்னு அர்த்தம். சீக்கிரம் ஒடியக்கூடிய கிளைகளை கொண்டதுன்னு பொருள்படத்தான் முருங்கமரம்ன்னு சொல்றோம்.  அனைத்து நிலத்திலும் இந்த முருங்கை வளரும் தன்மைக்கொண்டது. தண்ணியில்லாத காட்டிலும், வெப்பம் அதிகமுள்ள இடத்திலும் இம்மரம் செழித்து வளரும்.  முருங்கையின் பூர்வீகம் இமயமலை அடிவாரத்து பின்னிருக்கும் பாக்கிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்காவுக்கு போய் கடைசியா இந்தியாவுக்கு வந்தது.  ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளாவில்தான் அதிகளவு பயிரிடப்படுது. இலங்கையிலும், தாய்லாந்து, தைவானிலும் பயிரிடப்படுது. பயிரிடப்பட்டதிலிருந்து ஆறு மாசத்திலிருந்து ஒரு வருசத்துக்குள் காய் காய்க்கும் தன்மைக்கொண்ட முருங்கை யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கைnனு பேர்ல காய்க்குது. முன்னலாம் அரை அடி நீளத்துல இருந்த முருங்கை இப்பலாம் ஒன்னரை அடி நீளத்துலயும் கிடைக்குது. இலை, பூ, காய், பட்டை, வேர்ன்னு அத்தனையும் மருத்துவ குணம் வாய்ந்தது. ,முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள்,   தாது உப்புக்கள் இருக்கு. காய் மற்றும் இலைகளில் வைட்டமின் சி அதிகளவு இருக்கு. மொரிங்கஜின், மொரிங்ஜின்னைன், பேரேனால், இண்டோல் அசிடிக்அமிலம், டெர்கோஸ், பெர்மைன், கரோட்டின், குர்சிடின், இரும்புசத்து, பொட்டாசியம் இருக்கு. கொழுப்பு சத்து துளியும் இல்லாதது இதன் சிறப்பு/ பொரியல், காரக்குழம்பு, சாம்பார்,பிரட்டல், சூப், கூட்டுன்னு அத்தனை விதமாய் இதை சமைக்கலாம். 

மருத்துவ பயன்பாடு....

முந்தானை முடிச்சு படத்துக்குப்பின் முருங்கையின் பயன்பாடு ’அது’ ஒன்னு மட்டும்தான் எல்லாருக்கும் தெரியும். அது ஓரளவுக்கு உண்மையாயிருந்தாலும் இன்னும் ஏகப்பட்ட மருத்துவ பலன் உண்டு. முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். அதுபோல் முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.  முருங்கைக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் இதிலிருக்கும் கால்சியம், இரும்புசத்துலாம் பெண்ணின் கருப்பையை வலுப்படுத்தி குழந்தைப்பிறப்பை  துரிதப்படுத்தும். முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும். இலையின் சாறு விக்கல் போக்கும். சமைத்த இலைகள் சத்துள்ளவை. ஃபுளு காய்ச்சல் மற்றும் சளி போக்கும். கண் நோய்களுக்கு சாறுடன் தேன் கலந்து இமையில் தடவ நல்ல பலன் கிடைக்கும். மஞ்சள், உப்பு சேர்த்து வதக்கி கட்டி உள்ள இடத்தில் இளஞ்சூட்டில் வைத்து கட்டினால் கட்டி பழுத்து உடையும்.  கழலை வீக்கங்களுக்கு இலைப்பசை பற்றாக கட்டப்படுகிறது. பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்கும்.தாய்ப்பாலை ஊறவைக்கும்.முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாத்திரத்தில் இரவு முழுதும் வைத்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும்.  ஆஸ்துமா, மார்ச்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

இத்தனை மருத்துவ குணம் கொண்ட முருங்கக்கீரையில செஞ்ச பொரியல் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்...
முருங்கைக்கீரை, 
வெங்காயம்,
பூண்டு,
காய்ந்த மிளகாய்,
கடுகு, 
உளுத்தம்பருப்பு,
கடலை பருப்பு
எண்ணெய்
துவரம்பருப்பு

முருங்கைக்கீரையை பழுத்தது, பூச்சிலாம் இல்லாம ஆய்ஞ்சுக்கோங்க.. துவரம்பருப்பை வேகவச்சுக்கோங்க. நல்லா வெந்திருக்கனும்,. ஆனா குழையக்கூடாது. 

வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு பொரிஞ்சதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவக்க விடுங்க. 


நசுக்கின பூண்டு, காய்ஞ்ச மிளகாய் சேர்த்து சிவக்க விடுங்க.

வெங்காயம் சேர்த்து வதங்கியதும் தண்ணி சேர்த்து கொதிக்க விடுங்க..


தண்ணி கொதிச்சதும் முருங்கைக்கீரை சேர்த்து கிளறி விடுங்க. 


கீரை கொஞ்சம் வதங்கினதும் உப்பு சேருங்க. முதல்லியே உப்பு சேர்த்தா கீரைல உப்பு இறங்கி உப்பு கரிக்கும். கீரை வெந்ததும் வேக வெச்ச துவரம்பருப்பை சேருங்க.  தேங்காய் துருவல் சேர்த்தா சத்து கூடும். சுவையும் நல்லா இருக்கும். இதேமாதிரி பக்குவத்துல கீரைல துவரம்பருப்புக்கு பதிலா வறுத்த வேர்க்கடலை, எண்ணெயில் வதக்கிய மிளகாயோடு பூண்டு சேர்த்து கொரகொரப்பா அரைச்சு சேர்த்தா வாசனையாவும் ருசியாவும் இருக்கும்.


அகத்தி வேகாம கெடுத்தது, முருங்கை வெந்து கெடுத்ததுன்னு ஒரு பழமொழி உண்டு. அதனால, முருங்கைக்கீரையை அதிகம் வேகவிடாதீங்க. குக்கர்ல வேகவைக்காதீங்க.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465975

நன்றியுடன்,
ராஜி.